செவ்வாய், 25 ஜூன், 2013

தவிப்பு

நாடுகின்ற நினைவெல்லாம் எனது நெஞ்சம்
 நனைகின்ற மழைக்காலம் எண்ணி எண்ணி
வாடுகின்ற நிலையினுக்கு ஆனேன் நானும்
 வாட்டமிலா முகத்தினளாய் நீயோ அங்கே
தேடுகின்ற கவியின்பம் நூலில் தேடித்
 திகைக்கின்றேன் கணப்போதும் கிடைப்பதில்லை
பாடுகின்ற பாட்டெல்லாம் நீயே யன்றிப்
 படுகின்ற துயரெல்லாம் அறிய மாட்டாய்

ஏந்திழையே என்னுயிரே இப்போ தெல்லாம்
 என்நெஞ்சம் உணர்வதெல்லாம் பிரிவுப் பாட்டே
வந்திங்குப் படித்தாலும் முடிவ தில்லை
 வாட்டிநிற்கும் காட்சியிலே இதுவும் காணாய்
செந்தமிழன் தன்மொழியில் கற்ப தற்குச்
 சிலகூட்டம் தடையாக இருத்தல் போலே
சொந்தமாக நீயிருந்தும் பழகு தற்குச்
 சுவராகத் தடைக்கல்லாய் யார மைந்தார்?

ஏக்கத்துப் பெருமூச்சு என்னைச் சுட்ட
 இதயத்தின் அடுக்களைதான் காண்பாய் நீயும்,
நோக்கணங்கே நோகாதே கேட்பாய் சற்றே
 நொடிப்போதும் படிப்பினிலே கவனம் செல்லா(து)
ஆக்கத்தில் கொண்டுவந்த பொருள்கள் யாவும்  
 அலைகடலில் நடுவினிலே அழிய விட்டுத்
தேக்கத்தில் இருக்கின்றேன் அறிவாய்; இன்னும்

  தெளிவாக உணர்த்தநானோ கவிஞ னில்லை
பூமிக்குள் இல்லை புதையல் !

வெற்றுப் பொழுதை வரவாக்கி- வாழ்வை
  விழலுக் கிறைத்த நீராக்கி- வெறும்
கற்றைக் காகிதக் கனவுகளில்-நீ
  காலம் முழுதும் கழிப்பதுமேன்?

மூலையில் கிடந்து தவமிருந்தாய்- நீ
  முகாரி பாடியே ஓய்ந்திருந்தாய்- புலர்
காலைப் பொழுது உனக்கில்லையா? உன்
  கண்ணைத் திறக்க வழியில்லையா?

எத்தனைக் கனவினில் குடியிருந்தாய்- அதில்
  எத்தனை மாளிகை கட்டுகிறாய்-உன்னில்
மெத்தன மேகம் மிதந்ததனால்- உன்
  மனத்தின் ஆழம் தெரியவில்லை.

நீயே உனக்கு எதிராகி- உன்
  நிழலே கூடப் பகையாகி-தினம்
தீயாய்க் கவலை பெரிதாகி-உன்னைத்
  தின்னும் படிக்கு விடலாமா?

இமைகளைக் கொஞ்சம் உயர்த்திப்பார்-உன்
   எதிரே இமயம் தெரிகிறதா? நெஞ்சச்
சுமைகளை எண்ணிக் கலங்காதே-வாழ்வில்
   சோதனை இன்றிச் சுகமேது?

நெற்றி மேட்டின் முகவரிதான்- உன்னில்
  நீளும் முயற்சி முத்திரைகள்-புகழ்
வெற்றிக் கொடியை நாட்டிடவே- மண்ணில்
  வீரப் பரணி பாடியெழு.

தாய்மண் உனக்கு அந்நியமா- உன்றன்
 தமிழ்மொழி உனக்குப் பகைக்களமா?- போரில்
காயப் படாமல் வெற்றியினை- இங்குக்
 காண்பதும் என்ன சாத்தியமா?

கடமை என்பது கடலலளவு- அதில்நீ
  கடந்து வந்தது காலளவு - உண்மை,
உடைமை என்பது உள்ளளவு-மனிதம்
  உயர்ந்திட அன்புதான் கொள்ளளவு.

தோள்கள் தாங்கும் கைகளினால்- பெருந்
 தடைக்கல் பாறையைப் புரட்டியெடு- வீர
வாளாம் கைவிரல் நீட்டியிங்கு- மண்ணில்
 வலிமையை ஒன்றாய்த் திரட்டியெழு.

காற்றுக்குப் புதியதிசை காட்டிவிடு- வியர்வைக்
 கடலில் மூழ்கி முத்தையெடு-சமூக
நாற்றுக்கு நன்னீர் ஊற்றிவிடு- நாளை
 நலமாய் வாழவழி காட்டிவிடு

ஒளிப்பய ணந்தான் உன்பயணம்-உன்றன்
  உழைப்பினைக் காட்ட இதுதருணம்- வாழ்வில்
நெளிந்தும் வளைந்தும் கொடுக்காமல்- நீ
 நெஞ்சை நிமிர்த்துப் போராடு

வருந்த வேண்டாம் வாலிபனே- உன்
  வாசலில் நம்பிக்கை வளரவிடு- உன்
மனத்தைத் திருத்தப் பயிற்சியெடு- பிறர்
  வாழப் பொருளைப் பகிர்ந்துகொடு



மூளைத் தனமே மூலதனம்- அது
  முடங்கிப் போனால் ஏதுதடம்? நல்ல
வேளை வருமென்று காத்திருந்தால்- அது
  வெட்டிப் பொழுதாய்க் கழிந்துவிடும்.

மனத்தைத் தோண்டிப் புதையலெடு- நல்ல
  மானிடம் போற்றும் புகழைப்பெறு- மனித
இனத்தை உயர்த்தப் பாடுபடு - அதற்கு
  இன்றே உழைக்கப் பயிற்சியெடு.

பூமியில் இல்லை புதையலடா- மனப்
  புன்னகை ஒன்றே விடியலடா- இங்கு
நாமும் வாழ்வ துண்மையடா- நாளும்
  நல்லதை நினைத்து உயர்ந்திடடா!


உறவுகள் பூக்கும் வாழ்வில் -ஒன்றாய்
 உணர்வுகள் மலர்ந்து சிரிக்கும்-இங்கு
நிறங்கள் பலவாய் இருந்தும்- மனித
 நேயம் ஒருகொடி பூக்கும்


மண்ணில் மனித உறவுகள்- சாதி
 மதங்களற்ற உணர்வுகள்-உயர்
விண்ணில் பறக்கும் பறவைகள்- அங்கு
 வேற்றுமை தமக்குள் எண்ணுமோ.

ஒற்றுமை காணும் உள்ளமே- பண்பில்
 ஓங்கும் இமயம் ஒக்குமே- நீரில்
பற்றிப் படரும் பாசிபோல்- இங்கு
 மானுடம் அழுக்காய்ப் போவதோ?

கத்து கடலடி தன்னில்- சிப்பி
 கலங்கா திருந்து ஈன்றிடும்-நல்ல
முத்துச் சிப்பியாய் ஒளிர்ந்திட-வாழ்வில்
  முந்தும் முயற்சிகள் வேண்டாமா?

நள்ளிர வினில்வந்த சுதந்திரம்- இன்று
 நச்சுப் பொய்கையாய்ப் போவதோ?- நம்
உள்ளெழும் சக்தியை ஒன்றாக்கி- பாரத
 ஒற்றுமை காண வேண்டாமா?

சொந்த நாட்டின் துயர்தீர- நம்மைச்
 சோதித் துணர்ந்து துயர்துடைப்போம்- மனித
மந்தைக் கூட்டம் திருந்தாமல்- நமக்கு
 மானிடம் என்பது பொருந்துவதா?

விட்டில் வாழ்க்கை வாழுதற்கே- மண்ணில்
 வீணர்கள் விதைத்த கொள்கைதனை-நாம்
எட்டி எறிந்து பொசுக்கிவிட்டு- புரட்சி
 எண்ணம் ஓங்க வழிசெய்வோம்
 

 

கோப்பைக் காமம்




விளிம்பில் இருந்தே
உயிர்ப்பிக்கிறது வாழ்க்கை.
கிண்ணத்தைப் பருகப் பருகக்
கிளர்ந்து எழுகிறது.
பருகிய படியே
பழகிப்போனது வாழ்க்கை.
விளிம்பிலிருந்து உறிஞ்சும்போது
தெரிகிறது
உயிர்த்துடிப்பின் சலனம்.
விளிம்பின் வாய் உரசலில்
நெருக்கம் முத்தமாகி
மோகித்து அலையும்
கோப்பையின் கைவிரல் அசைவில்
காமம்  தொடத் தொடத்
தொட்டுச் சுவைத்து
வற்றிய பின்னும்
கிண்ணத்தைத் தேடுவதில்தான்
வாய் எத்தனிக்கிறது
எந்திர கதியில் அடங்கிப்போய்
மீண்டும் மீண்டும்
கோப்பைக்குள் தேடி அலையும்
சலனமற்ற அசைவில்
வழிகிறது வாழ்க்கை.