வியாழன், 11 ஜூலை, 2013

'யதார்த்த த்தில் இழையும் கவிதைகள்

யதார்த்தத்தில் இழையோடும் கவிதைகள்
                                                                      (விமர்சனம்)
கவிதை என்பது புனைதல் அன்று;   அது ஓர் அனுபவம். போகிற போக்கில் சட்டையைப் பிடித்திழுத்துச் சட்டென்று திரும்பிப் பார்க்கச் செய்யும் வியப்பு. அந்த வியப்புனூடே பயணிக்கும்போது விரியும் பார்வை ஒரு "க்ளைடாஸ்கோப்" அனுபவம்.
சுருக்கமாகவும் சுருக்கென்று மனத்தைத் தைக்கும்படியான அப்படிப்பட்ட கவிதைஹைகூ என்று இறக்குமதியாகி ஆண்டுகள் பல கடந்தாலும் தமிழில் இன்னும் அதற்கு மவுசு கூடிக் கொண்டுதான் இருக்கின்றது..
ஹைகு மேலைநாட்டுப் பதியன்; தமிழ் நாட்டுக்குத் தக்கவாறு அதனை வைத்து ஒட்டுச் செடி வளர்க்கும் வித்தை வியப்புக்குரியதாய் வளர்ந்து விட்டிருக்கிறது. விவேகம் உள்ளவர்கள் அதில் வித்தகம் புரிகிறார்கள். விபரம் தெரியாதவர்கள் எழுதிக் குவிக்கிறார்கள். குவியலிலும் நல்ல ஹைகு கிடைக்காமல் போவதில்லை.
சுருங்க உரைத்தலே பாரதிக்குப் பிடிக்காது என்றாலும், ஆத்திசூடி போன்றவற்றைப் புதியன விரும்பு என்பதற்கான கருத்துகளைச் சொல்லவே, அவரும் ஆத்திசூடி போன்ற வாமன உருவ வடிவத்தை எடுத்துக் கொண்டார். அவருக்கு  ஹைகு அறிமுகமாகி இருந்த போதிலும், அதில் நாட்டமில்லாமல் போனது. கவிதை என்பது ஒரே அடியாகச் சுருங்கிப் போய்விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்துள்ளார்.
கவிதையின் இன்றைய நிலைமையே வேறு. சுருங்கச்சொல்லி விளங்க வைக்கும் வெளிச்சத்திற்குத் தன்னைத் திசை மாற்றிக்கொண்டிருக்கிறது இன்றைய கவிதை. தமிழ் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும்.
துளிப்பா, தன் வடிவ எல்லை தாண்டிக் கருத்து மின்னலை உள்வாங்கிக் கொண்டு கவிதை உலகை எட்டிப்பார்த்த வண்ணம் உள்ளது.
இந்த விதத்தில் துளிக்கவிதையோடு தூரிகை வண்ணத்தையும் சேர்த்துக் குழைத்துத் தந்திருக்கிறார் திரைப்படத் துறை சார்ந்த லிங்குசாமி. வர் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், ஓவியர், கவிஞர். லிங்கூ என்ற பெயரில்  வெளியிட்டிற்கும் இந்தக் கவிதைத் தொகுதி அவருடைய பெயருக் கேற்றவாறு ஓர் இலக்கிய வகையாக(GENRE) உருவாவதற்கான வரவேற்பு வாசலைத் திறந்துவிட்டிருக்கிறார்.
இந்தத் தொகுதியில் பெரும்பாலான கவிதைகள் ஹைகு இல்லை யென்றாலும், ஹைகுவிற்கான வித்தினை அள்ளித் தெளித்திருப்பதைப் பார்க்கலாம். ஹைகு வடிவத்தைப் பற்றி இங்குக் கதைக்காமல், ஹைகூ உணர்வினை விதைப்பதாய் உள்ளவற்றை வெளிப்படுத்துவதுதான் உண்மைக்கு மாறுபடாமல் இருக்கும். இந்த விதத்தில் துளிக்கவிதையோடு தூரிகை வண்ணத்தையும் சேர்த்துக் குழைத்துத் தந்திருக்கிறார்  லிங்குசாமி.
இதில் இடம்பெற்றுள்ள பல கவிதைகள் சட்டென்று வீசும் தென்றலாய் மனத்தை வருடிவிட்டுச் செல்வன; சில கவிதைகள் கருத்துகளால் ஆன பாதரசத்தின் அடர்த்தி; சில காட்சிக் கவிதைகள் நேர்த்தியான கவிநெசவு. சில கவிதைகள் சுபாவனுபவத்தின் சுவடுகள்.
அன்றாட வாழ்வில் காணும் யதார்த்தமான காட்சிகள் வெறும் சொல் விளையாட்டாக ஆகிவிடாமல், கச்சிதமான வார்த்தைகளால் கவிதையின் கணபரிமாணத்தைக் கவிதையில் கொண்டுவந்திருப்பது அவரது கவிதையின் வெற்றிக்கான விடியல். அவரது ஒவ்வொரு கவிதையையும் கம்பியில் தொங்கிக்கொண்டிருக்கும் மழைத்துளியை இரசிப்பது போல ரசிக்கலாம்.
சில ஹைகுகளில்  தீர்க்கமான பார்வை தெரிகிறது. உதாரணமாக,
                 மொட்டைப் பனைமரத்தில்
                 தோகை விரித்தபடி
                 மயில்.

இது அசலான ஹைகுவிற்குரிய அடையாளம்.
மயில் மொட்டை பனைமரத்தில் இருக்குமா? இது வெறும் காட்சியா? இங்கு வெறும் அழகியல் மட்டுமா வெளிப்பட்டிருக்கிறது? இந்தக் கவிதைக்கு இன்னொரு முகம் இல்லையா? இது காட்சிப் படிமமாகத் தோன்றவில்லையா? பனையோலை இருக்க வேண்டிய இடத்தில் மயில் தோகை விரித்தபடி இருக்கிறது. மொட்டையாக இருக்கும் ஒன்று அழகு படுத்தப்படுகிறது. பனையோலை விரிந்திருக்க வேண்டிய மயிலின் தோகை அதனை நிறைவு செய்து அழகூட்ட வில்லையா? வெற்றிடத்தை அழகுணர்ச்சி நிறைவு செய்கிறது. மொட்டைமரம் வறட்சியின் அறிகுறி. தோகைமயில் மலர்ச்சியின் அறிகுறி. மலர்ச்சியால் வறட்சியை நிறைவு செய்யலாம். இல்லாத ஒன்றில் இருப்பதன் தேவை நிறைவு செய்யப் படலாம். இப்படி மொட்டைமரமும், தோகை மயில் இரண்டையும் இன்னும் பல பல அர்த்த அடுக்குகளாக உணர்ந்துகொள்ள முடியும்.
வாழ்க்கை எப்போதுமே முரணானதுதான்.முரணாவதில்தான் வாழ்க்கையின் வெற்றியே இருக்கிறது; இனிக்கிறது. ஆண்xபெண்; பகல்xஇரவு: வெப்பம்xகுளிர்ச்சி; இப்படி வாழ்க்கை அழகிய முரணில்தான் இயங்கிக் கொண்டு இருக்கிறது. இலக்கியத்தில் முரணும் ஓர் உத்தியாகிக் கவிதைக்கு அழகூட்டுகிறது. லிங்குசாமியும் சில கவிதைகளை அழகிய முரணில் தருகிறார்.
                                எப்போதும் குடையோடு செல்லும்
                                தாத்தாவின் இறுதி ஊர்வலத்தில்
                                நல்ல மழை -                                  இது காட்சி முரண்.
                                ஆசையாய் வாங்கினேன்
                                புத்தர் சிலை                                     இது கருத்து முரண்

                                                நீ யாரையோ
                                                திட்டிக்கொண்டிருக்கிறாய்
                                                அவன் சிரித்துக்கொண்டிருக்கிறான்

                                                                                                இது நிகழ்ச்சி முரண்
                                                பூச்சி மருந்தில் பூச்சி
                                                உயிரோடு 
                                                                                                இது இயற்கை முரண்
இப்படி முரணுக்குள் நம்மை மோகிக்கச் செய்யும் கவிதைகள் பல. 
இதில்  வரும் காதல் கவிதைகள் தனி ரகம். இயல்பான காட்சிகளில் இழைகிறது காதல் தவிப்பு. காதலில் காத்திருப்பதும் காதலுக்கான ஏக்கப் பார்வையும் ஒரு காவிய ரசனையாய்ப் பெருக்கெடுப்பன. அந்த வகையில் எதிர்பார்ப்பும் ஏக்கமும் சில கவிதையில் எளிதாகப் படம் பிடித்துக் காட்டப் பட்டுள்ளன. காதலில் முதற்பார்வை வியப்பளிப்பது; அது ஒரு மின்னல் வெட்டுப்போல! நிழலை அசைபோடும் நினைவுகளாகத் தொடர்வது. 
ஒரு கவிஞன் எழுதினான் சுருக்கமாக! நெஞ்சில் சுருக்கெனத் தைக்கும் வகையில்...
                                                மின்சாரத்தைத் தொட்டால்தான் 'ஷாக்',
                                                மீராவைப் பார்த்தாலே 'ஷாக்'.
இது லிங்குசாமி பார்வையில் ஒரு பஞ்ச் டயலாக் ஆகலாம். இவர் எழுதுகிறார்.
                                                இரண்டு விஷயங்கள் மட்டும்
                                                அப்படியே மனதில் நிற்கிறது
                                                முதன்முதலில் கடல் பார்த்தது
                                                கவிதாவைப் பார்த்தது
காதலின் பார்வையில் ஆழம், அகலம், நீளம் ஆகியவற்றை உணர்த்தவோ என்னவோ அவருக்குக் கவிதாவையும், கடலையும் இணைத்துப்பார்க்கத் தோன்றியிருக்கிறது. கடலன்ன காமம் என்றார் திருவள்ளுவர். சேக்ஸ்பியர்
sea of love and lust என்றார். காதல் யாரிடத்தும் அனுமதி கேட்டுக் கொண்டு நெஞ்சில் புகுவதில்லை. உயர்திணை செய்யும் காதலை அஃறிணை கூடப் பேசும்அது தனி உலகம்.
காதலில் துப்பட்டா கூடப் பேசுகிறது. எப்படி?
                                                அந்த
                                                அடுக்குமாடிக் குடியிருப்பில்
                                                நீ எந்த வீட்டில் இருக்கிறாய் என்பதைக்
                                                கூப்பிட்டுச் சொன்னது
                                                உன் கத்திரிப் பூ துப்பட்டா
என்பதில் காற்றில் அசையும் துப்பட்டா ஒருபுறமும் காதலில் அலையும் மனமும் ஒருங்கே ஓரங்கட்டப்படாமல் பார்வையை அஃறிணைப் பொருளில் வைத்துக் காண்பித்திருப்பது யதார்த்தத்தின் இழை.
இப்படிக் காதல் கவிதைகளில் வகுப்பறைத் தண்டனை, கோயில், திருவிழா, பால்கனி, பூக்கள், படித்துறை, இடி, மின்னல் போன்ற காட்சிகளில் காதலை அதுவும் கைக்கிளைக் காதலாகப் பல கவிதைகளில் காட்டியிருப்பது கவி எழுத வரும் இளைஞர் மத்தியில் ஒரு கவன ஈர்ப்பு.
மனித நேய மிக்க  அக்கறையை, இதில் இடம்பெறும் சில கவிதைகள் பதிவு செய்துள்ளன.
                                                இஸ்திரி போடும் தொழிலாளியின்
                                                வயிற்றில் சுருக்கம்
மடிப்புக் களையாமல் சலவை செய்யும் தொழிலாளியின் அடிவயிற்றில் வறுமையின் சுருக்கக் கோடு, கவிஞரின் பரிவுப் பார்வையால் பக்குவமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது அழகிய முரண். இக்கவிதையைப் படிக்கும்போது தாரா பாரதி எழுதிய கவிதை வரிகள் நினைவு வருகின்றன.
                                                முதுகில் சுமக்கும் தானிய மணிகள்
                                                வயிற்றுப் பக்கம் வருவதே இல்லை
என்ற மரபுசார் கவிதை, மூட்டைத் தூக்கும் தொழிலாளியின் அடிவயிற்றுப் பிர்ச்சனையைக் காட்டும்.
                                                யாரோ தெரியவில்லை
                                                அந்த இரவு நேரப் பேருந்தின்
                                                கடைசி இருக்கையிலிருந்து
                                                தொடர்ந்து
                                                விசும்பல் சத்தம்
                                                வந்துகொண்டே இருந்தது

என்ற கவிதை ஒரு நிகழ்ச்சியைப் பூடகமான செய்தியால் உணர்த்துகிறது. மனித நேயப் பார்வை இக்கவிதையில் இருப்பினும், சொல்லப்பட்டிருக்கும் சூழல் ஊகப்படுத்தி உணரத்தக்கதாய் உள்ளது.
போகிற போக்கில் மனத்தில் சலனத்தை ஏற்படுத்திச் செல்வது ஹைகுவின் தனித்தன்மை. அத்தன்மையின் சாயலில் பல கவிதைகள் துளிப்பாக்களாக வெளிப்பட்டுள்ளன. 
                                                வயல் முழுக்க வண்ணத்துப் பூச்சிகள்
                                                என்ன செய்ய
                                                களைபறிக்க வேண்டும்
ஹைகு பார்வையில் இரக்கத்திற்குத் தனியிடம் உண்டு என்பதை ஜப்பானிய ஹைகுகளில் காணலாம். இதனை ஒத்த கவிதைகள் இந்தச்சாயலில் பல வந்துள்ளன.
ஹைகுவிலிருந்து கிளைத்த இன்னொரு வடிவம் ஹைஃபூன் என்பது. இந்த வடிவம் ஹைகுவைப் போல இறுக்கமானதும் செறிவுடனும் இருக்கவேண்டும் என்பதில்லை. ஆனால் நகைச்சுவை, எள்ளல் போன்றவை இலகுவான காட்சிகளில் வெளிப்படுத்தப்பெறும். இத்தொகுயில் இவ்வாறான கவிதைகளும் இடம் பெற்றிருக்கின்றன. சான்றுக்குச் சில ;
தேவை இல்லாமல் /குழப்பம் விளைவிக்கிறாய் /எல்லாத் ,திருமண வீடுகளிலும்

ஒரு சிங்கத்தைக் /காதலிருந்தால் கூட இந்நேரம் /சொல்லியிருப்பேன் 

தொடர்ந்து /உன்பின்னால் வரும்பொழுது /கெட்ட வார்த்தையில் திட்டுகிறாய் /உனக்குத்தான் /அது கெட்ட வார்த்தை

நல்ல வேளை / நீ ஹெல்மெட் அணிந்துவந்தாய் /விபத்து தவிர்க்கப்பட்டது

அசோகர் போதி மரங்களை  நட்டார் /அதில் ஒன்று கூட போதி மரமில்லையா?

என்னிடம் கேட்காமல் கடந்து செல்கிறான் /பிச்சைக்காரன்

ஆண்தெய்வங்கள் வைத்திருக்கும் /அத்தனை ஆயுதங்களையும் /ஒருசேர வைத்திருக்கிறாள் காளி

இப்போதெல்லாம் /ரிங்கோடனில் மட்டுமே /கேட்க முடிகிறது /குருவிகளின் சத்தம்
இவற்றில் பல வகை உணர்வுகள் எடுத்துச் சொல்லப்பட்டிருப்பினும் அவை பல கோணங்களில் சிறப்புற அமைந்துள்ளன.
சில ஞாபகங்கள் மனத்தை அசை போட வைக்கும். அவையும் கூடக் கவிதையில் நினைவுக் காட்சியின் சாட்சியங்களாய்க் கவிதையில் முளைவிடும்.
                                                தூரத்தில் யாரோ இருமும் சத்தம்
                                                இறந்து போன அப்பாவை ஞாபகப் படுத்துகிறது.
இது ஒருவகையில் 'நாஸ்டால்ஜிக்' மனோபாவம். சிக்மண்ட் ஃபிராய்டு மொழியில் சொல்வதென்றால் 'அஸ்ஸிமிலேஷன் ஆஃப் டெத்'. இறந்தவர்களைப் பற்றிய எண்ணங்கள், அவர் இறந்த சில காலங்களில் மனத்தை விட்டு அகல்வதில்லை என்ற மன வெளிப்பாட்டின் உளவியல் நுட்பம். இதனை உள்வாங்கிய கவிதையாக இக்கவிதை உள்ளது.  இக்கவிதையில் ஒரு வித்தியாசமான பார்வை அதி அற்புதமாக வந்திருக்கிறது.
                     அரிசியைச், சுமந்து வரும் எறும்பு
                     சிரிக்கிற மாதிரியே தெரிகிறது

இது உணர்த்தும் செய்தி ஒருபுறம் இருப்பினும் இப்பார்வை ஒரு வியத்தகு பார்வை. பற்களின் வெண்மை, அரிசியின் வெண்மையில் வைத்துச் சொல்லப்பட்டிருக்கும் விதம் அருமை. எறும்புகள் அரிசையை வரிசையாய்க் கொண்டுசெல்லும் ஒழுங்கும், அது செல்லும் அழகில் சிரிப்பைக் காண்பதும் பார்வை  நுட்பத்தின் உச்சம்.
இக்கவிதை நூல் கருத்திற்கும், காட்சிக்குமான விருந்து. இளைஞர்கள் பட்டாளம் விரும்பி ஏற்கும் வகையில் அல்லாமல் அவர்களை எழுதத் தூண்டும் அளவிற்கு இந்தக் கவிதைத்தொகுதியின் கவி வடிவம் அமைந்துள்ளது. இந்த வடிவத்தை உயர்வு நவிற்சியில் சொல்வதென்றால் லிங்கூ கவிதை வடிவம் ஓரு இலக்கிய வகையாகக் கருதலாமா என்று எண்ணத் தோன்றுகிறது.
லிங்கூ என்ற இத்தொகுதி, லிங்குசாமியை கலைஇலக்கியத்தில். தூரிகையின் தோழனாகவும், கவிதையின் காதலனாகவும், அழகின் ரசிகனாவும் காட்டுகிறது.
                                                                            ink makes a man to think
                                                          Lingoo makes young to write epigrams.

என்று சொல்லலாம் போலத் தோன்றுகிறது.

மாறுதடம்- சிறுகதை

மாறுதடம்
__________________________________________________________________
இராம.குருநாதன்
சிவராமன் படுத்த படுக்கையாய்க் கிடந்தார்.
மெல்ல மெல்லக் கண்களைத் திறந்து பார்ப்பதும், பின் இறுக்கமாய் மூடிக்கொள்வதும் அவரது வழக்கமாய்விட்டது. மூச்சு மட்டுமே சுதந்தரக்காற்றாக வருவதும், போவதுமாக ஊசலாடிக் கொண்டிருந்தது. வயது எண்பத்தொன்றைத் தாண்டியது. ஒற்றை நாடி சரீரம். நெட்டையான உயரம். இப்போது உடம்பு குறுகிப்போயிருந்தது. கண்களில் முன்பிருந்த ஒளி மங்கி மறைந்து விழிப்படல அழுத்தத்தால் சரியாகப் படிக்கமுடியாத  நிலை. வயது முயற்சியால் முகத்திலும், கைகளிலும் வரிவரியான கோடுகள்.
கிழிந்த நாராகப் படுத்துக்கிடந்தார் சிவராமன். முன் அறையில் இருந்த கட்டில் அருகே திறந்திருந்த சன்னலில் ஊடுருவிய சூரியத் திட்டுகள் சுவரில் வளையங்களாக ஒளிக்கோலங்களிட்டு மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருந்தன. அவை மறைய மறைய அவரது நினைவுகள் மட்டும் வளைய வந்துகொண்டிருந்தன.
சில நினைவுகள்... சில பிர்ச்சனைகள்... சில கனவுகள்...
இந்த இளவேனில் காலத்தின் வெம்மை அவரை வாட்டி வதைத்துக்கொண்டிருந்தது.
சிவராமன் சிறுவனாக இருந்தபோது அவருடைய தந்தை மார்க்கபந்து சொல்லிச் சொல்லி உருவேற்றியிருந்த தாயுமானவர் பாடல்கள், வள்ளலாரின் அருட்பா, பாரதியார் கவிதைகள் அவரது உள்ளத்தில் கலந்திருந்தன. அவற்றோடு கூட நாட்டுப்பற்றும் கலந்திருந்ததால், சிவராமனுக்குப் பாரதியின் பாஞ்சாலி சபதத்தின் மீது தனி அக்கறை. சோதியாயும், சுடரொளியாயும் பாஞ்சாலியாயும் பாரத அன்னை அவனது நெஞ்சில் கொலுவீற்றிருந்தாள்.
தமிழகத்திற்குக் காந்திஜி வந்திருந்தபோது சிவராமன் தன் சிறு வயதில் தந்தையின் தோளில் ஏறி மக்கள் வெள்ளத்தில் மிதந்து காந்தியைக் கண்ட காட்சியையும், பல்லாயிரக்கணக்கான மக்களோடு தானும் காந்தியைக் கையெடுத்து வணங்கியதையும் எண்ணிப் பார்த்தார். அப்போது சிவராமனுக்கு வயது ஐந்து. அந்த நாள் காட்சியை முதன்முதலாய்க் கண்ட அந்த விநாடியிலிருந்து இன்றைய நாட்டு நடப்புவரை பல நிகழ்ச்சிகள் அவர் நினைவிலிருந்து சங்கிலித் தொடர்களாக வந்து போயின. பல நிகழ்ச்சிகள் நினைவிலிருந்து தாண்டிச் சென்றன. அதுபோல் தன் வயதும் எண்பதைத் தாண்டிவிட்டதை உணர்ந்தார்.
பெருமூச்சோடு படுக்கைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த டம்ளரில் இருந்து கோதுமைக்கஞ்சியை எடுத்து ஒரு மடக்குக் குடித்தார். அது உப்புச் சப்பு இல்லாதிருந்தது. இப்போதிருக்கும் அவரது வாழ்க்கையைப் போல......  ஆனால், உப்புக்காக அன்று... வேதாரண்யத்தில் நடந்த உப்புச் சத்தியாகிரகத்தில் தந்தையோடு தானும் ஊர்வலமாகச் சென்றதை. எண்ணிக்கொண்டார். இளங்காளையாகத் தன் நாட்டுப்பற்றைக் காட்டிக்கொண்ட அவரது முதல் நிகழ்ச்சி அது. அவரது நெஞ்சில் நினைவுத்தழும்பாக நீங்காதிருந்தது அது.
பள்ளிமாணவனாக இருந்தபோது நடந்த  ஒரு நிகழ்ச்சி  அவரது நினைவலைகளில் மிதந்து வந்தது. ஆங்கிலேயர் ஒருவர் வரலாற்று ஆசிரியராக முதன்முதல் பள்ளியில் ஆசிரியராகப்பணியில் அமர்த்தபட்டார்.  ஆங்கிலப் பள்ளியை விட்டால் வேறு பள்ளிகள் இல்லாத காலம் அது. அங்கே எந்தக் காரணத்திற்காகவோ சக ஆசிரியர் ஒருவரைப் பார்த்து ''யூ பிளடி இண்டியன்'' என்று கடுமையாகப் பேசிவிட்டார் அந்த ஆங்கிலேய ஆசிரியர். சிவராமனுக்கு வந்ததே கோபம். அவர் கூறிய வார்த்தையைத் திரும்பப் பெற வகுப்பறையிலேயே உண்ணாவிரதம் இருந்தான். அந்த ஆங்கிலேயர் மன்னிப்புக் கேட்டுக்கொண்ட அடுத்த நாளிலிருந்து சிவராமன் பள்ளிக்கூடத்திற்குப் போய்வருவதனை வெறுத்தான். பள்ளிப் படிப்புக்கு முற்றுப் புள்ளி வைக்க நேர்ந்தது.
படிப்புப் பாதியில் நின்றதைப் பெரிதாக எண்ணவில்லை. அவர் தந்தை கூறியது இப்போதும் அவருக்கு நினைவிருக்கிறது. ''சிவா, படிப்பு என்ன படிப்பு? எழுதப் படிக்கத் தெரிஞ்சா போதாதா? நாட்டுக்காக எதையும் தியாகம் செய்யலாம். பள்ளிக்கூடம் போயி படிச்சாதான் படிப்பா? படிப்பறிவு வேண்டியதுதான்.அதெ பள்ளிக்கூடத்துல போய்தான் கத்துகணும்னு இல்லே. வீட்லேயிருந்து கத்துக்கலாம். படிப்புங்கறது வேறே! அறிவுங்கறது வேறே!! நம்ம பாஷையே போதும். அந்நிய பாஷை படிக்கத்தெரியலேன்னா குத்தமில்லே. தெரியாட்டி நாம ஒண்ணும் குறைஞ்சிடப்போறதில்லே. அவன் பாஷையைக் கத்துக்கிட்டு,'கிளார்க்கா' போயி அவனுக்குக் கால் பிடிக்கவா போறோம். அதை விடக் கேவலம் ஒண்ணுமில்லே. அவனுக்குக் கைகட்டி சேவகம் செய்யவா நாம பிறவி எடுத்தோம். பள்ளிக்கூடம் போகாட்டியும் பரவாயில்லே. வீட்டிலேயே இருந்து கத்துக்கலாம்.'' இப்படி அப்பா சொன்னதை'' வேறு பாஷைகள் கற்பாய், வீட்டுவார்த்தைகள் கற்கிலாய்'' என்று பாரதி பாடிய அடிகளை உச்சரித்தபடி தான் செய்தது சரியே என்று முடிவுக்கு வந்தவன் அவன். தீவிரமான தேசிய உணர்ச்சியைத் தன்னுள் ஏற்படுத்தியிருந்த தன் தந்தையின் சொற்களை இப்போது நினைவுக்குக் கொண்டு வந்ததும் கண்கள் பனித்தன.
தலைவர்கள் எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது அதனை எதிர்த்துத் தமிழ் நாட்டிலிருந்து முதல் குரல் கொடுத்தவர் தன் தந்தைதான் என்பதை எண்ணிப்பார்த்துச் சிவராமன் பெருமிதப் பட்டார். அப்போது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அப்படிப்பட்ட தேசப்பற்றுள்ள ஒரு தந்தைக்கு மகனாக இருப்பதை எண்ணி எண்ணிப் பெருமைபட்டுக்கொள்வார். அவரைப் போன்ற ஒருவரை இப்போது பார்க்க முடியுமா என்று நினைத்தபோது ஆனந்தக் கண்ணீர் பெருகியது. தன் தந்தையின் பெருமைகளைப் பின்னாளில் தன் மகன் திலீபனுக்கும், மகள் கங்காவிற்கும் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்.
மார்க்கபந்து விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டு திருச்சிச் சிறையில் அடைக்கப்பட்ட நிகழ்ச்சியைச் சிவராமன் நினைத்துக் கொண்டார். அந்த நிகழ்ச்சி அவருள்ளத்தில் ஆழமாக வேரூன்றி இருந்தது. சிறைக்குச் சென்ற தந்தை உயிரோடு திரும்பிவரவில்லை. தந்தை இறந்த ஓராண்டிற்குள் தாயும் இறந்து போனாள். எல்லாம் பழங்கனவாகிப் போன நிகழ்ச்சிகள்.
மெல்ல மெல்ல நினைவலைகளில் இருந்து மீள முயன்றார். ஆனால் நினைவுத் தோரணங்கள் அவர் முன் அணிவகுத்து நின்றன. தொண்டையை அடைத்தது. இடையிடையே இருமல்... கனைத்துக்கொண்டார். தொண்டையிலிருந்து சளியை வெளியேற்ற முடியாமல் திணறினார். வெளியே சைக்கிள் மணியடித்துவிட்டு பேப்பரைப் போட்டுவிட்டுச் சென்றான் பேப்பர் போடும் பையன். எழுந்து பார்க்க இயலாத நிலையில் மீண்டும் தலையைச் சாய்த்து இடப்புறமாகத் திரும்பிப் படுத்துக்கொண்டார்.
தந்தை இறந்த பிறகு சிவராமன் பொது வாழ்க்கையில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவராகத்தான் இருந்தார். ஒருவழியாக ஆங்கிலேயன் இந்தியாவை விட்டு வெளியேறிய பிறகு விடுதலைக்கு முன்னும் பின்னுமான காலங்களை ஒப்பிட்டுப் பார்த்தார். நாடு விடுதலை பெற்ற சிலமாதங்களில் திருத்துறைப் பூண்டியில்  நிகழ்ந்த கூட்டத்தில் தம் நண்பர் சபாபதியைச் சந்திக்கநேர்ந்தது. அவரும் சிவராமனைப் போல விடுதலை உணர்வு மிக்கவர். அவருடைய மகள் பானுமதியை முறைப்படி திருமணம் செய்துகொண்டார். அவளோடு நடத்திய இல்லறவாழ்வு... அந்த வாழ்க்கைச் சுவடுகள்.......... நினைவுத் தோரணங்களாய் அவரது மனத்தில் பசுமையாய்ப் பதிவாகி இருந்ததை படுத்துக்கொண்டே நினைத்துப் பார்த்தார். '' பானு! தேசத்துக்கு நம்மாலான உதவியை  செய்யணுங்கிற உணர்ச்சி எத்தனை பேர்கிட்ட இருக்கு. சுதந்தரம் வந்த பிறகுதானே நமக்குப் பொறுப்பும் கடமை உணர்ச்சியும் அதிகமா இருக்கணும். அதெ யாருமே புரிஞ்சிகிடலே. நாடு பிரிஞ்சு பிளவுபட்டு.... தனித்தனித் தீவுகளா இருந்த மக்களை ஒன்னு திரட்டி நமக்குச் சுதந்தரம் வாங்கித் தந்த தலைவர்களைப் பத்தி யாருமே  புரிஞ்சுகிடலே.. தேசபக்தி தானா வரணும். என்னோட அப்பா ஒரு கவளம் சோறு ஊட்டும் போதே நாட்டுப் பற்றையும் சேர்த்து ஊட்டினாரு.. இப்ப நம்ம புள்ளங்களை வளர்க்கிறது  பெரிய பொறுப்பு, உங்கிட்டதான் இருக்கு அந்தப் பொறுப்பு. ஏன்னா, நான் ஊர் ஊரா போய்க் கூட்டங்களிலே பேசப் போயிடறேன். நீ தான் அவுங்கள நல்லா பாத்துக்கணும்'' என்று திருமணமான புதிதில் மனைவியிடம் சொன்னதை எண்ணிக்கொண்டார். ஆனால் அவளோ தன்னையும் பிள்ளைகளையும் தவிக்க விட்டுத் திருமணம் ஆன பத்தாண்டுகளில் பானுமதி  மறைந்து போனதை நினைத்ததும் விழிப்படலத்தை கண்ணீர் மறைத்தது.  
குடும்பத்தின் பொறுப்புச் சுமை ஒரு புறம் அலைக்கழித்தது. நாட்டு நடப்புகளும் அவரைப் பெரிதும் பாதிக்கத் தொடங்கியது. கூட்டங்களுக்குச் சென்று பேசுவதைச் சில ஆண்டுகளுக்கு முன் நிறுத்திக்கொண்டார். விடுதலை பெற்ற பிறகு காந்தியக் கனவுகள் சிதைந்து வருவதைக் கண்கூடாகப் பார்த்தபோது கண்கள் கலங்கின, அதனை நினைத்தபோது நெஞ்சு விம்மியது. சுதந்திரப் பயிர் வேரோடு பிடுங்கப்பட்டு வேறிடத்தில் நடுவது போன்ற பிரமையில் மூழ்கியிருந்த போதுதான்  பக்க வாதம் அவரை நிரந்தமான நோயாளியாக்கிப் படுக்கையில் கிடத்தியது. மக்களும், அரசியல் தலைவர்களும் காந்தியச் சிந்தனையிலிருந்து அந்நியப்பட்டுப் போய்விட்டார்களே என்று எண்ணியபோது மிகவும் வேதனைப்பட்டார். சில தேசியவாதிகள் சுதந்திரப்பயிரை மேயத் தொடங்கி விட்டதால், அதனை நினைத்தவுடன் நெஞ்சு விம்மியது. இருமல் தலைதூக்கியது. வறட்டு இருமல் தொடர்ந்தது. லொக்....லொக்.... லொக்  மூன்று முறை இருமியதும் வலதுபுறமாய்ச் சாய்வாகப் படுத்துக்கொண்டார்.
பாரத அன்னைக்காகத் தங்களைக் களப்பணியில் ஈடுபடுத்திக்கொண்டு  நாட்டுக்காக உயிர் துறந்த தியாகிகள் எங்கே? அவர்களெல்லாம் வேலியைக் காக்க மடிகின்ற பயிர்களாக இருந்தார்கள். இப்போதோ வேலியே பயிரை மேய்கின்ற கதைதான். நாட்டில் ஒரு பக்கம் பிரவினை வாதம். இன்னொரு புறம் தீவிர வாதம். மதம் என்ற பேரால் சமூக ஒற்றுமைக்குப் பங்கம். ஜாதிச் சண்டைகள்.. எங்குப் பார்த்தாலும் ஏதேனும் ஒரு காரணத்தால் கலவரங்கள்.. உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பின்மை, விலைவாசி ஏவுகணை செல்லும் உயரத்தைத் தொட்டு நிற்றல், பாலியல் கொடுமைகள்.. இவற்றையெல்லாம் எண்ணிப்பார்த்த சிவராமனுக்கு உறக்கம் வரவில்லை..
இன்றோ நாளையோ என்று பழம்பாயாகிக் கிடந்தது அவரது காலம்.
பத்திரிகைகளைப் படித்தால் கொலை,கொள்ளை, கற்பழிப்பு.. இது பாரத பூமியா? சிவராமனுக்குக் கல்லூரியில் படிக்கும் மகள் கங்காதான் நாளேட்டை வாசித்துக் காட்டுவாள். செய்திகள் செவியில் ஏறும்போதே அவருக்கு இரத்த அழுத்தமும் ஏறிக் கொண்டே போகும். அந்த அளவுக்கு நாட்டு நடப்புகள்...... துப்பாக்கிச் சூடு, சாராயச் சாவு, பசி பட்டினியால் குடும்பமே தற்கொலை, காண்ட்ராக்ட் ஊழல், நிலபேர ஊழல்.. இப்படிப்பல செய்திகளை அவள் படித்துக்காட்டுவாள். கல்லூரிக்கு ஆயத்தமாக இருக்கும்போது அவளைப் படிக்கச் சொல்லுவதால் அவளுக்கும் ஒரு விதச் சலிப்பு. ஒரு சமயம் கங்காவிடம் சொன்னார்.'' கங்கா! இதோ பாரம்மா, தினம் தினம் பேப்பரைப் படிச்சுக்காட்டறே. நாட்டு விஷயங்களைக் கேட்டாலே காதுலே விஷம் பாயறாப்பிலே இருக்கு.சமூகத்தையும்  நாட்டையும் எத்தனை எத்தனை தினுசான நச்சுக்கொல்லிகள் அரிச்சுக்கிட்டு இருக்கு பார்த்தியா? இதற்காகவா நாம் சுதந்தரம் வாங்கினோம். இதற்காகவா சிறைக்குப் போய் சித்திரவதை செய்யப்பட்டோம்.'' என்று இக்காலத் தலைமுறை செவிக்கொடுத்துக் கேட்பார்கள் என்ற ஒரு நப்பாசையயில் அவளிடத்துப் பேசினார்.
இப்போதெல்லாம் அவரால் தொடர்ந்து பேசவும் முடியவில்லை. ஒரு கால கட்டத்தில் மூன்று மணிநேரம்  பேசியவர் அவர்.
!ஒருமுறை தஞ்சையில் திலகர் திடலில் பேசினாரே.அது மறக்கக்கூடிய பேச்சா?  பசி பட்டினிக் கொடுமைகளால் நாடு நித்திய தரித்திரராய் ஆகிக்கொண்டிருக்கிறதே, இதற்குக் காரணம் யார்? அரசியல் வாதிகளே.! சுதந்திரம் பெற்ற பிறகு நாம் காண்பதென்ன? ஏழை ஏழையாகவே இருக்கிறான். பணக்காரன் மேலும் மேலும் சொத்து சேர்த்துக்கொண்டே செல்கிறானே, எப்படி? ஆட்சியின் பேரால் நடக்கும் அட்டூழியங்கள்.. கட்சிகளுக்குள் எத்துணை நிறமாற்றங்கள்? மரத்துப் போன விசுவாசங்கள்... மரித்துப்போன மனிதநேய உணர்வுகள்... மனிதச் சந்தையில் மலிவாகிப் போனதே மனிதம்... சிவராமன் ஒரு காலத்தில் இப்படிப் பேசியவராயிற்றே அதுதான் அவரது கடைசிப் பேச்சு. அதற்குப் பிறகு எந்தக் கூட்டத்துக்கும் போகமுடியாமல் பக்க வாதம் அவரை வாட்டிவிட்டது.  
கங்காவிற்கும் கனவுகள் நிறைய இருந்தன. தன்னைச்சுற்றிய உலகம் சுருங்கிப் போவதை அவள் விரும்பவில்லை. அப்பாவிற்குப் பணிவிடை செய்வது முதல் நாளேட்டைப் படித்துக் காட்டுவது வரை அவள்தான். ஆனால் சில தினங்களாக அவளிடம் மனமாற்றம் காணப்பட்டது. வீட்டிலே சிறைப்பட்டுக்கிடப்பதாக எண்ணத் தொடங்கிவிட்டாள் கங்கா. தான் இன்னும் தன்னிடமிருந்தே விடுதலை பெறவில்லை என்ற உணர்வுக்கு வந்துவிட்டாள்.  அந்தச் சிந்தனை அவளிடம் தீவிரமாகியது.  
புறச்சூழலால் அவள் எண்ணம் வேறுபடத் தொடங்கியது. அவளிடம் இறகு முளைத்த எண்ணம் புதிய வானத்தை நோக்கிச் சிறகு விரித்தது. கல்லூரியில் தன்னோடு படித்த சஞ்சீவோடு  வீட்டை மறந்து ... தந்தையை மறந்து ... தான் வளர்ந்த சூழலை மறந்து சஞ்சீவோடு பறந்து விட்டது அந்தச் சுதந்திரப் பறவை.
ஒரு நாள் காலை 'பங்க்' கடை ஒன்றில் பத்திரிக்கையில் புகைப்படம் வெளியாகி இருந்ததைப் பார்த்த மாத்திரத்தில் அதிர்ந்து போனாள் கங்கா. அன்றைய நாளேட்டில் பரபரப்பான செய்தி முதல்பக்கத்தில் கொட்டை எழுத்தில் இருந்தது. ''போலீசின் பிடியில் இருந்து தப்பிய தீவிரவாதி''.
அந்த நபர் வேறுயாருமில்லை. தன் அண்ணன் திலீபன்  என்று அறிந்தபோது கலங்கினாள்.
தியாகி சிவராமனின் மகன் அல்லவா அவன்?
படுக்கையில் சிவராமன் இருமிக்கொண்டே இருந்தார். சிவராமன். ஏதோ தொண்டைக் குழியை அடைத்தது போன்று இருந்தது.
இன்னும் விடியவில்லை. சாம்பல் பூத்த வானம் பொல பொல வென்று வர இன்னும் நேரம் இருந்தது. பேப்பர் பையன் எறிந்துவிட்டுப் போன நாளேடு அப்படியே கிடந்தது. அங்கு அவருக்குப் படித்துச்சொல்ல யார் இருந்தார்கள்? வாசற்படியில் பத்திரிக்கை கிடந்தது. அந்தக் கிழவரைப் போல .. அனாதையாக!...