வியாழன், 26 மார்ச், 2015

இருளின் இன்னொரு பக்கம்

இருளின் இன்னொரு பக்கம் ,,,..

இராம. குருநாதன்

அறிவுச்சுரண்டல் ஒருபக்கம்
பொருள் சுரண்டல் ஒருபக்கம்
இளைஞர்களை அலைக்கழிக்கின்றன.

ஐ பேடிலும் ஆன்ட்ராய்டிலும்
தொடுதிரையைத் தீண்டித்துக்கொண்டிருக்கும்
தீ விரல்கள்
ப்ளஸ் டூ முதல் கல்லூரி வரை..

அறிவுச்சுரண்டலை நோக்கி
அன்றாட ஆன்ட்ராய்ட்க் காட்சிகளில்
மூழ்கித் திளைக்கும் 
பாலியல் வக்கிரங்களைப்
பதுங்கிப் பார்த்துப் பொழுது கழிக்கும்..

பொருள் சுரண்டலுக்குக்
கன்னித்
தீவுகளாய் நின்று
காட்சிக்கு அழைக்கும்
'தீம் பார்க்குகள்'
4  D   யிலும் 6 D யிலும்
பயணித்துப் பொழுது கழிக்க
மாயக்கம்பளத்தை விரித்துப்
பயணிக்கும்.

இப்பொருள் சுரண்டலும்
அறிவுச்சுரண்டலும்
பூமியின் சுழற்சியைப் புரட்டிப்போடும் 
இந்த இரண்டுக்குமான இருளிலிருந்து
விடியாமலே திணறிக்கொண்டிருக்கிறது

இளைஞர் உலகம்   

கவிதை- அரசியல் செய்யும் கொசுக்கள்





அரசியல் செய்யும் கொசுக்கள்
இராம.குருநாதன்

உறங்கும்போது
படுத்த கோணத்தில் 
கோயில் துவார பாலகர் போல,
இடது காலை நீட்டியும்,
வலது காலை மடக்கியும்
கையில் மட்டும் கதாயுதத்திற்குப் பதிலாக
உறக்கங்கெடுப்பதை விரட்ட கொசு மட்டை

எத்தனை முறை அதைப் பயன்படுத்தினாலும்
ஒழிவதாயில்லை கொசுக்களின் கூட்டம்

கொசு ஒழிப்பும் லஞ்ச ஒழிப்பும் ஒன்றுதான்
விளம்பரப்படுத்துகிறார்கள் ஒழித்துவிட்டோமென்று!

எவ்வளவு மருந்தடித்தாலும் மனிதர்கள்
பழகிவிட்டனர் இரண்டுக்குமாக.. 
கையில் கொசு மட்டை தூக்கிப் பயன் என்ன?

வீதியில் கொசு மருந்தடித்தால்
வீட்டுக்குள் உரிமையோடு நுழைவன புகையோடு கொசுவும் 

அவை நுழைவதற்கென்றே
ஒவ்வொரு சன்னலையும் திறந்துவைக்கிறோம்.. 

சாக்கடைகள் வீட்டிலும் வெளியிலும் அதிகரிப்பதால்
அரசியல் செய்யும் கொசுக்களை
ஒழிக்கமுடியவில்லை..

எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் முடியவிலை.
என்ன செய்வது?

ஆனால்.
ஒன்று மட்டும் தெரிகிறது.
லஞ்சத்தை ஒழிக்க முடியாதது போல,

கொசுக்களையும்!!

வியாழன், 19 மார்ச், 2015

கவிதை

வாழ மறந்த நாள்கள்....!


உன்னைப் பார்த்த பொழுதுகளை விடப்
பார்க்க நினைத்த
பொழுகளே
மகத்தானவை.

எழுதிக் குவித்த கவிதைகளை விடவும்
உன்னைப்பற்றி எழுதுவதற்கு
மனத்தில் அசைபோட்ட
உயிர்மெய்எழுத்துகளே
உயிர்ப்பானவை.

உன்னோடு பேசிய நேரங்களை விடப்
பேசிவிட மாட்டோமா என்ற
ஏக்கத் தவிப்புகளே
பொன்னான நேரங்கள்.

வருவேன் என்று சொல்லிக்
காத்திருந்து நீவந்ததற்குமுன்
உனக்காக  காத்திருந்த பொழுதுகள்
பசிக்கான கணங்கள்

உன் பேச்சை உன்னிடமிருந்து
கேட்டதைவிடவும் மற்றவர்களிடமிருந்து
உன்னைப் பற்றிய பேச்சு
பிரியமாக இருந்திருக்கிறது

நாம் வாழ்ந்த நாள்களைவிடவும்
வாழ மறந்த நாள்களே
இன்னும் நிழலாய்த்
தொடர்ந்துகொண்டிருக்கின்றன
வாழ்க்கை வெளியில் !