வெள்ளி, 10 ஏப்ரல், 2015

லக்ஷ்மி சரவணக்குமார் எழுதிய நீலப்படம்- திறனாய்வு

மன்மத வாசலுக்குப் பின் புலனாகும் வன்மம்
                                                                                               இராம.குருநாதன்
 
 உலக நாவல் வரலாற்றில் நடிகைகளை மையமாக வைத்துப் புனையப்பெறும் கதைகள் உண்மையின் அடிப்படையில் புனைவுச்சித்திரங்களாக உருப்பெற்றுவந்துள்ளன. நடிகைகளின் வாழ்க்கையை நேரடியாகவும், மறைமுகமாவும் புனையப்பட்ட கதையாடல் புதிதன்று. தனிபட்ட வாழ்க்கை, குடும்பஞ்சார்ந்த நிலை, பொதுவாழ்க்கையில் கொண்ட தொடர்பு எனப் பல கோணங்களில்   நடிகைகளின் வாழ்க்கைப்புனைவுகள் நாவல்களில் சித்திரிக்கப்பட்டுள்ளன. பண்பாடு சார்ந்த நிலைகளிலும், பண்பாட்டுக்கு அப்பாற்பட்டு விலகியுமான கதைகள் பல இந்திய அளவிலும், உலக அளவிலும் வெளிவந்துள்ளன.  The Actress,  Tender Is The Night, Of Mice And Men   முதலிய நாவல்கள் உலக அரங்கில் நடிக, நடிகைகளின் வாழ்க்கையை முன்னிறுத்திய நாவல்கள் ஆகும். இந்திய நாவல்களிலும் குறிப்பாக வங்க, இந்தி, குஜராத்தி நாவல்களிலும் கூட அவர்களை மையப்படுத்திய நாவல்கள் வந்திருக்கின்றன.

லஷ்மி சரவணக்குமாரின் 'நீலப்படம்' ஒரு நடிகையை அதுவும் பி  கிரேட் படங்களில் நடிக்கும் ஆனந்தி என்பவளின் வாழ்க்கையை விவரிக்கிறது. நடிகை என்றாலே ஆடவரை மோகித்தலைக்கும் காமம் தலைதூக்காமல் இருப்பதில்லை. அந்த விதத்தில் இந்த நாவலும் அதற்கு விதிவிலக்கன்று.   தொடக்கத்தில் கதாநாயகியின் தங்கையாக நடித்துப் பின் முக்கிய கதாநாயகி ஆக வளர்ந்து' அடல்ஸ் ஒன்லி' படங்களில் மட்டுமே நாற்பத்து எட்டுப் படங்களில்  உலாவந்த ஆனந்தி, வெகுசனப்பட வாய்ப்புகளைத் தவிர்த்தவள். சொல்லப்படாத கதை என்ற திரைப்படத்தை உருவாக்கி இயக்கும் முயற்சியில் ஈடுபடுவதை விவரிப்பதே இந்த நாவல்.

காம வயப்பட்டவளாக, சிகரெட்டைப் புகைப்பவளாக, மதுஅருந்தாமல் இருக்கமுடியாதவளாக, தான் எதிர்கொண்ட ஆடவர்களின் காமத்தைத் தணிப்பவளாகவும், தணித்துக்கொள்பவளாகவும் இருக்கும் ஆனந்தி ஒரு வித்தியாசப்படைப்பு. அவளது திரைப்பட வாழ்வும், தான் அனுபவித்து வரும் தனிப்பட்ட  வாழ்வும் ஏற்ற இறக்கங்களோடு கதைப்பின்னலை நகர்த்திச் செல்லும் களமாக உள்ளனஎந்த ஒரு நடிகைக்கும் அவள் கதாநாயகியோ அல்லது துணைநடிகையாகவோ யாராக இருந்தாலும் அவர்களிடத்து ஒரு வித மனச்சிதைவு( a kind of schizophrenia) இல்லாமல் போகாது. கலை உலகம் காமத்தின் வலையில் சிக்கித் தவித்துச் சீரழிந்து போகும்போது சிதறுண்ட மனநிலையில் அத்தகைய மனச்சிதைவு அவர்களிடத்து இல்லாமல் இருக்குமா? ஆனந்திக்கும் அது நேர்கிறது. அதற்குத் தகுந்தாற்போல, தான் விரும்பும் ஆடவரையும், மதுவையும், சிகரெட்டையும் அவளால் துறக்கமுடியவில்லை. ஆடையை மாற்றுவது போல ஆடவரை மாற்ற நினைக்கும் நடிகைக்கு இயல்பாக வாய்க்கும் ஒன்றுதான் இத்தகைய போக்கு. எல்லா ஆபாசங்களையும்  ஆசாபாசங்களையும்  பார்த்த   ஒருத்தி, அதுவும் திரைப்படத்தொழிலில் இருப்பவள், படம் எடுக்க ஆசைப்படுவது ஒரு வகையில் எதிர்பார்ப்புக்கு அவளை இட்டுச் செல்கிறதுஆனந்தியின் தனிப்பட்ட வாழ்க்கையே நாவல் முழுதும் விரிகிறது. இருந்தாலும் அவள் எதிர்கொள்ளும் நட்பினராக பாபு, ஜோபி, மதன், படத்தயாரிப்பாளர் முதலியோர் கதைப்பின்னலுக்கான நிகழ்வுகளை நகர்த்திச் செல்லத் தேவைப்பட்டுள்ளனர். திரைப்படத்துறை என்றாலே பணப் பிர்ச்சனையும், மனப்பிர்ச்சனையும் பின்னிப் பிணைந்து கழுத்தை இறுக்காமல் இருக்குமா? இந்த இரண்டிலுமாகத் தவித்துக் கரையேற நினைக்கும் கறைபடிந்த பி கிரேட் நடிகையான ஆனந்தி படம் எடுப்பதற்காகக் கடன் வாங்கியதைத் திருப்பச் செலுத்தமுடியாத நிலையில்,  சிறைக்குச் செல்ல நேர்கிறது. சிறையிலும் கூட அவளுக்கு 'லோகல்' பிராந்தி கிடைத்துவிடுகிறது. போதையில் என்றோ தன் அம்மாவிற்கு எழுதிய கடிதம் அம்மாவின் சுய ரூபத்தைக் காட்டுகிறது. மறந்து போன வாழ்க்கை அவள் முன் பேருருக் கொண்டு நிறுத்துகிறது. இதனை முதலிரு அத்தியாயங்களில் சொல்லிக் கதைக்குள் நுழைவதற்கு நாவலாசிரியர் நம்மை ஆயத்தப்படுத்துகிறார்அவளுடைய அம்மா, 'தேடி வருகிறவர்களையெல்லாம் வஞ்சிக்கவோ, புறக்கணிக்கவோ தெரியாதவள். எல்லோருக்கும் அள்ளிக்கொடுக்க அவளிடம் காமமும், கொஞ்சம் காதலும் இருந்தது.' ஆனந்தி அம்மாவில் பாதி. அவள் வஞ்சிக்கவும் தெரிந்தவள்; ஆடவர்களைச் சில சூழ்நிலைகளில் புறக்கணிக்கவும் செய்தவள். காம வலையில் சிக்கவைத்துக் காரியம் முடிக்கத் தெரிந்தவள். ஆனந்தி சிறிதே வயது கூடிய நிலையில் இருந்தாலும் வனப்பு ஓரளவு இருக்கத்தான் செய்தது. அதுவும் வயது வந்தோர்க்கான படங்களில் நடித்து ஒரு வசீகரத்தை ஏற்படுத்தியிருந்தவள். கேரளத்திலும் கூட அவளது கவர்ச்சிக்கு ஒரு காலத்தில் ஏக கிராக்கி. ஆனந்தி 'தனக்கு முன்னால் ஆண் எப்போதும் ஒன்றுக்கும் ஆகாதவனே  என்ற  நினைப்பில் செருக்கோடு' இருப்பவள். ஆடவர் உலகை அறிந்து வைத்திருப்பதில் அனுபவ சாலி. அவள் வாழ்க்கையே ஒருவகையில், promiscuous   life style தான்!  இதனால்தான் சில நிகழ்வுகளில் தம்மிடம் பாபு, மதன் ஆகிய இருவரையும் கூடப் புறக்கணிக்கத் துணிகிறாள். ஜோபியிடம் மட்டும் காமவயப்படுகிறாள். அவனும் அதனை எதிர்பார்த்தே அவளிடம் பணி புரிகிறான். தன்னைச் சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவரச்செய்த பாபு அவனது ஆசையைத் தீர்த்துக் கொள்ள முயன்றவன் அதில் தோற்றுப்போனாலும் அவளுக்குக் கடைசி வரை உறுதுணையாக இருந்து உதவுகிறான். படத்தயாரிப்பில் எல்லா வகையிலும் ஒத்துழைக்கிறான். அப்படிப்பட்டவனையே ஒரு கட்டத்தில் பழிவாங்கிச் சித்ரவதை செய்கிறாள். அவள் ஒழுங்கக் கெட்டவளாக- (அவளளவில், அவள் அப்படி நினைத்ததில்லை!) இருப்பினும் பாபு செய்துவந்த ஒரு கொடுஞ்செயல் அவளிடம் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது. சிறுமிகளை வன்புணர்ச்சி செய்வதையே வாடிக்கையாகக் கொண்டு காமக்கொடூரனாக இருக்கிறான் என்று ஆனந்திக்கு என்றைக்குத் தெரிந்ததோ அன்றிலிருந்து ஆனந்தியிடம் ஒரு திருப்பு முனை ஏற்படுகிறது. அவன் உயிரை வாங்காமலேயே அவனைப் பயங்கரமானதொரு சூழ்நிலையில் அடைத்துவைத்துக் கொடூரமாகச் சித்திரவதைச் செய்கிறாள்.

இந்த நாவலில் ஆனந்தி ஒரு பக்கமும், பாபு ஒருபக்கமுமாக இருந்து கதை நிகழ்வை நடத்திச் செல்வது  ஆசிரியரின் கதை சொல்லும் நேர்த்தியைக் காட்டுகிறது

ஆனந்தி ஓர் உளவியல் பாத்திரம் என்றால், பாபுவும் அத்தகையதொரு பாத்திரமாகவே காட்டப்படுகிறான். கதைப்பின்னலும் இரண்டுக்குமான பின்னணிக்களத்தில்தான் இயங்குகிறது. சின்னஞ்சிறுசுகளையே காம வேட்டையாடுவதை வழக்கமாகக்கொண்ட பாபுவின் நடத்தை ஒரு கால கட்டம் வரை ஆனந்திக்குத் தெரியாமலே இருந்துவிடுகிறது. தெரிந்ததும் அவளிடம் ஒருவித மடைமாற்றத்திற்கு (sublimation) அவளை ஆளாக்கிவிடுகிறது. பாபு அஸ்ஸாமில் ஒரு சிறுமியைப் பார்த்ததும், தன் மனைவியின் ஞாபகம் வரவே, அந்தப் பள்ளிச் சிறுமியை வலிந்து புணர்ந்துவிட, தீவிர காவல் விசாரணைக்குப் பிறகு சிறைசெல்கிறான். தண்டனை அனுபவித்து ஊர் திரும்புகையில் அச்செய்தி ஊரார்க்கும், தன் மனைவி, மகள் ஆகியோருக்கும் தெரிய வரக் குடும்பத்தார் அவனை வெறுத்தொதுக்கிறார்கள். குடும்பத்தை விட்டு விலகிவந்த நிலையிலும் கூட அவனது காமத் தாகம்  தணிந்தபாடில்லை. வடநாட்டு நர்த்தகியோடு சில நாட்கள் தங்கிச் சுகம் அனுபவிக்கிறான். ஒரு முறை நண்பர் வீட்டுத் திருமணத்திற்காக மயிலாடுதுறை சென்றவன், திருமணத்தன்று முதல் நாள் அறையில் ஒரு சிறுமியை யாரும் அறியாவாறு வன்புணர்ச்சியில் ஈடுபடுகிறான். ஆனந்தி தயாரிக்கும் படத்தில் நடிக்க வைக்க ஒரு சிறுமி தேவையானபடியால், சிக்மகளூர் சென்று பதிமூன்று வயது சிறுமியை அழைத்து வந்து ஆனந்திக்கு அறிமுகப்படுத்துகிறான். பாபு குடியிருந்த வீட்டில் தற்காலிகமாகத் தங்கி இருந்த ஆனந்தியிடம். அந்தச் சிறுமியோடு தான் தனிவீட்டில் இருக்கப் போவதாகச் சொல்கிறான். அந்தச் சிறுமியை சத்யா என்ற பெயரில் நடிக்க வைக்கிறாள் ஆனந்தி. அவளிடம் நடிப்புக்கலை இருப்பதை அறிந்து அவளிடம் தனிப்பரிவு காட்டிய ஆனந்தி ஒரு நாள், பாபு சத்யாவை வன்புணர்ச்சி செய்திருப்பதைக் கண்டு அதிர்ந்து போனவள், பாபு பற்றிய செய்திகளை அவனது அறையிலிருந்து குறுந்தட்டு, கறை படிந்த ஆடை முதலியவற்றைச் சேகரிக்கிறாள். பல சிறுமிகளை வன்புணர்ச்சி செய்வதைத் தொழிலாகக் கொண்டவனைப் பழிவாங்கத் துடித்து அச்செயலில் தீவிரமாக இறங்குவதை 154 பக்கங்களுக்குப் பிறகு வரும் நிகழ்ச்சிகள் விறுவிறுப்போடு படிக்கத்தூண்டுகின்றன. சாதாரணமாகச் சென்ற கதை அதற்குப் பிறகு பாபுவைப் பழிவாங்கும் கொடூரமான அவளது உணர்ச்சியை நன்றாகவே விவரிக்கிறது. பாபுவைச் சித்திரவதை செய்வதற்கு அடிப்படையான காரணம் சத்யாவை அவன் வன்புணர்ச்சி செய்ததிலிருந்து தொடங்குகிறது. ஆனந்தியிடம் இந்த மாற்றம் எப்படி சாத்தியமாயிற்று என்பது ஒரு பக்கம் கேள்விக் குறியாக இருந்தாலும், தனக்கு எல்லா வகையிலும் உதவி செய்த ஒருவனைக் கொடூரமாகச் சித்திரவதை செய்ததோடு, அந்த நிலையிலும் அவனுக்குப் பணிவிடை செய்வது அவள் வித்தியாசமான பிறவி என்பதைக் காட்டுகிறது. அவன் உயிரைக் கொல்லாமல் கொல்வது என்று முடிவெடுத்தது அவளுக்குள் இருக்கும் ஒரு sadist மனப்பான்மையைக் காட்டுகிறது. மொராலிட்டியே இல்லாமல் வாழ்ந்த ஒருத்தி மொராலிட்டி கொண்டவளாக மாற்றம் பெற்றது ( a person without morality , finding morality)  சத்யா என்ற சிறுமிக்காக! இந்த மன மாற்றம் அவளிடம் வந்ததற்கு ஆனந்தியிடம் இருந்த ஒரு மாறுபட்ட மனச்சிதைவே. தன்னைப் பேட்டி காணவந்தவனை அறைந்தது, மதனுடைய மகள் பிறந்த நாளில் கலாட்டா பண்ணி அவனையும் அறைந்தது, பொம்மைக் கடையில் ஆபரேட்டரை அறைந்தது எல்லாம் அவளது பழி வாங்கும் போக்கிற்கும் அடாவடித்தனத்திற்கும் காரணமாகி மனச்சிதைவுக்கு ஆட்படுத்திவிட்டன. இதன் எதிரொலியைத்தான் பாபுவைப் பழிவாங்கும் கட்டத்தில் பார்க்கிறோம்.    (பாபுவிடம் வடநாட்டு நர்த்தகி வசியம் பண்ணக் கொடுத்த வஸ்துவை பாபு பயன்படுத்தியிருந்தால் ஆனந்தி அவனிடம் அடங்கிப் போயிருப்பாளோ?)

இந்த நாவைலைப் படிக்கும்போது  இது ஒரு 'போர்னோகிராபியாக' இருக்கும் என்று நினைத்தால் அது படிப்பவரைப் பொறுத்தது. இது போன்ற நாவல் எழுதுவதற்கும் எழுத்தாளர்கள் சிலர் இருக்கவே செய்கிறார்கள். நடப்பதை எடுத்துச் சொல்வதுதானே இலக்கியம். கலை உலகில் இது இயல்புதான். ஆனால் இன்றைய நாட்டு நிகழ்வில் சிறுமிகளை வன்புணர்ச்சிக்கு ஆளாக்கும் காமக்கொடூரர்களைப் பற்றிய செய்திகள் தினந்தோறும் வந்துகொண்டுதானே இருக்கின்றன. நாவல் இருப்பதைத்தானே பதிவு செய்கிறது. கொஞ்சம் காமம் தூக்கலாகவே இருப்பதால் அதற்கும் ரசிகர்கள் இருக்கவே செய்வார்கள். கொச்சையானஅதுவும் பச்சையான சொற்கள் வரவேண்டும் என்று நினைத்து எழுதுவது இவரது பிற நாவல்களில் காண்பதுபோலவே இதிலும் மையமிடுவது ஏனோ? ஓர் ஆங்கில நாவலைப் படித்த உணர்வு இந்நாவலைப் படிக்கும்போது ஏற்படுகிறது.
               


இராம. குருநாதன்
9444043173