செவ்வாய், 28 நவம்பர், 2017

எண்ணும் எழுத்தும் / பிருந்தா சாரதி

                    இராம. குருநாதன்

எண்ணில் பிறந்த இலக்கியம்

எண்கள் இல்லாது புள்ளி விவரக் கணக்கு இல்லை. கணக்கு என்பது வெறும் எண்களோடு மட்டும் நின்று விடுவதில்லை. அதில் வழக்கும் எழுத்தும் இணைகிறது. பேச்சு வழக்கில் "கணக்குப் பண்றான்"; "அவன் போடும் மனக்  கணக்கு" என்று வழங்கப்படுகிறது.

மொழியும் கணிதமும் இணைவது உண்டு. தமிழ் இலக்கியமே எண்ணிக்கை அடிப்படையில்தான் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. கணக்கு என்பது எழுத்தைக் (alphabet)  குறித்து வந்தது.தமிழ் இலக்கிய உலகில் பதிணென்மேற்கணக்கு(சங்க நூல்கள்) பதிணென்கீழ்க் கணக்கு( அறநூல்களும், அகநூல்கள் சிலவும்) என்று தொன்றுதொட்டு வழங்கப்பட்டு வருகிறது. எண்ணிக்கையை இலக்காகக் கொண்ட இத்தகைய இலக்கியங்கள் அடிக் கணக்கை வைத்துப் பகுக்கப்படலாயின (குறுந்தொகை,நெடுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்துப் போல்வன  சான்றுகள் ) பாட்டு எண்ணிக்கையை வைத்துத் திணைமாலை நூற்றைம்பது, கார் நாற்பது, நாலடி நானூறு என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளனர். சங்க இலக்கிய வழக்கே கூட எண் அடிப்படையில், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்றுதானே சொல்லப்பட்டுவருகிறதுஎண்களை வைத்து இடைக்காலப் புலவர்கள்( கவி காளமேகம்) சொல்விளையாட்டைச் செய்து மகிழ்வித்ததுமுண்டு.

       பூநக்கி ஆறுகால் புள்ளினத்திற்கு ஒன்பதுகால்
       ஆனைக்குக் கால் பதினே  ழானதே 

என்று வரும் பாட்டில் தேனீ, வண்டு போன்றவற்றிற்கு  ஒன்றரை கால்( 6x ¼) பறவையினத்திற்கு இரண்டே கால்;(2x¼)) யானைக்கு நாலே கால்(17x¼) என்று சொல் விளையாட்டைக் கணக்கு வழியாகவே சொல்லிச் சென்ற புலவர்கள் இருந்திருக்கிறார்கள். இறைவனைக்கூட எண்களின் அடிப்படையில் வைத்துப் பாடியுள்ளனர்.(ஏறுமயில் ஏறிவிளையாடும் முகம் ஒன்றுஒன்றானவன்இரண்டானவன்….. மூன்றானவன் என்று பாடி ஒவ்வொரு எண்ணுக்குமுரிய விளக்கம், திரைப்படம்- திருவிளையாடல்வாழ்வியலிலும் கூட இன்றும்  ஒத்த கடை, இரட்டைச் சாலை, முச்சந்தி, நாலுபேர், ஐந்தாம் படை  போன்ற வழக்குகள் பேச்சுவழக்கில் புழங்கி வருவதைக் காணலாம். இவ்வாறு எண்களின் பொருண்மையில் பா இயற்றப்பட்டமைக்கும், மக்களின் வழக்காறு களுக்கும் தனி வரலாறே உண்டு.    

இந்த அடிப்படையில், பிருந்தா சாரதி எழுதி அண்மையில் வெளிவந்த எண்ணும் எழுத்தும் என்ற கவிதை நூல்,எண்களை மையமிட்டு எழுதப்பட்டதாகும். எண்கள் எழுத்தாவதும்,எழுத்து எண்ணாவதும் கவிதையாகி இருக்கிறது. எண்ணும் எழுத்தும் கணக்கோடு தொடர்புடையது. வாழ்க்கையோடு சம்பந்தப்படுவது' தத்துவ வார்ப்பிற்கும் இடம் தருவது -  இவற்றினூடே தம் கவிதைகளை எண்களைக்கொண்டே நகர்த்தியிருக்கிறார்  பிருந்தா சாரதி.

எண்களை மையப்பொருளாக்கிக் கவிதை பாடவேண்டும் என்ற கூரிய நோக்கு வாய்த்திருப்பதால், கூறவரும் பொருள் ஒவ்வொன்றிலும்  எண்ணுக்கேற்றச் சிந்தனைத் தளங்களைச் சிதறவிடாமல்சேதாரம் ஆக்கிவிடாமல் ஒன்று சேர்த்திருக்கிறார்.

ஒன்றோடு இன்னொன்று சேரும்போதுதான் அதன் அர்த்தம் வாழ்க்கையோடு ஒன்றுசேர்ந்து வசப்படுவதாய் உள்ளதுஒன்றை இரண்டாக்குவதும், ஒன்று இரண்டாவதும், ஒன்றை அடுத்து இன்னொன்று அதனோடு ஒன்றுவதும் வாழ்க்கைக்கணக்கு. எதுவுமே ஒன்றிலிருந்துதான் தொடங்குகிறது. அதேசமயம் ஒன்று, ஒன்றோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. 'அது பலவாகலாம். பலவும் ஒன்றாகலாம்'  என்ற கருத்தினைச் சொல்லிவிட்டு, ஒன்று என்பதை மறுதலையாகவும்  சிந்தித்து,  'ஒன்றாதே' என்ற சொல்லாடலையும் எண்ணிப்பார்க்கிறார் கவிஞர்.

இரண்டு என்ற எண்ணை, இணை எதிர்மை (binary opposite) அல்லது இரட்டை எதிர்வு என்ற அடிப்படையில் காண்பது பொதுவியல்பு. இரு துருவங்கள் என்று சொல்வதில்லையா? ஒன்றையடுத்து மற்றொன்றை எதிர்கொள்வதன் சொல்லாடலை மேடுx பள்ளம், ஒளிxஇருள், தூரம்x பக்கம் என்று சொல்லிவிட்டு,'எல்லாம் இரண்டாய் இருப்பதால்தான் ஆணும் பெண்ணுமாய் இருவராய் இருக்கிறோம்' என்கிறார். ஒன்றும் இரண்டும் காதலர்கள் சங்கமிக்கும் கூடுதுறை. இதன் அடிப்படையில், 'ஈருயிர் ஓருடல்' ஆகிறது. இரண்டு என்ற எண் பற்றிய உணர்வு ஏழு கவிதைகளாக விரிகின்றனநதியின் பாய்ச்சலில் எதிர்பாராமல் சந்தித்துக்கொண்ட இரண்டு கூழாங்கற்களைப் பேச வைக்கும்  கவிஞர், அகமனவெளியை முன்னிறுத்தி,,

    பிரிவின் ஸ்திதியும்  
    உறவின் கதியும்
    ஓடும் நீரில்  எழுதப்பட்ட விதி 
    என்பதை அறிந்து திகைத்து நொறுங்கிப்
    பொடிப் பொடியாகின்றன
    மணல்துகள்களாய்
    மெளனத்தில் உறைந்த காதலுடன் 

என்று சொல்கின்றார். கூழாங்கல் என்பதைக் குறியீடாகச் சுட்டுகிறார்அத்வைத நிலையில் வைத்துக் காணும்படியாக உள்ளது இக்கவிதை.

இரண்டு ஊதுபத்திகள் என்ற கவிதை, காட்சிப் படிமமாக(visual imageவிளங்க வல்லது. ஒன்றை ஒன்று ஊடுருவி ஒன்று கலத்தலும் ஒருவகையில் அத்வைத நிலைதான். இதனைச் சாத்தியப் படுத்திக் காட்டியிருப்பது அருமை. 'காற்றின் அந்தரத்தில் புகை ரூபமாக' என்ற அடர்த்தியான பொருளில்  கையாண்டிருப்பது புதுமை.

                       எரிந்து சாம்பலாகி உதிர்ந்து
                       வாழ்வையே
                       நறுமண சரித்திரமாய் எழுதும் அவற்றைவிட
                       என்ன வாழ்ந்துவிடப்போகிறோம் நாம்,

தத்துவ இழையை மின்னலிட வைக்கும்படியான வரிகள் இவைபுகை ரூபத்தில் ஒன்று கலப்பினும் அநித்யத்தின் அர்த்தங்களைப் பொருளமைதியோடு கட்டவிழ்ப்பதாய் உள்ளது.

'அந்தரத்தில் அவை வரையும் புகை ஓவியங்கள்' என்று காட்சிப்படுத்தியிருப்பது அருமை. இரண்டு தாயக்கட்டைகள் என்ற கவிதை புதுமையானது.காலத்தின் கைகளில் உருளும் அவையும் குறியீட்டுக்( symbolic ) கவிதையாகிறது. பரிணாமத்தின் பகடைக் காய்களாக ஆணும் பெண்ணும்  உருவாகியிருப்பதைச் சுட்டிக்காட்டும் கவிஞர், காயின் இன்னொரு பரிமாணத்தைச் சூதாட்டத்தின் மையப் பொருளாக்கியிருக்கிறார். அதே தலைப்பில் அமைந்த இன்னொரு புதிர் அகத்துறைத் தழுவியது. பகடைக்காய் விளையாட்டைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளமுடியுமா? மகா பாரதத்தின் கதைக்கு அது அடித்தளம் அல்லவா? ஆடுவது விளையாட்டுதான் என்றாலும் உணர்வுகள் உண்மையாகின்றன. அதனால்,

                             விளையாட்டு வினையாகிறது
                             தாயம் காயமாகிறது
                             பகடை பாடை ஆகிறது

என்றுரைத்திருப்பது, பகடைக்காய் விளையாட்டின் தன்மையைப் பலவாறு அர்த்தப்படவைக்கிறது.

இரட்டை மாட்டு வண்டி என்னும் கவிதையில் மாடும், வண்டியும் குறியீடுதான்.  விலங்கினைக் காட்டித்தான் அன்பின் நெருக்கத்தைக் காட்டவேண்டியிருக்கிறது. ( கலித்தொகைச்  செய்யுள்கள் சில அன்புக்காட்சியை  விலங்குகள் வழியே காட்டியுள்ளனசங்க அக இலக்கியச் சாயலின் பரிமாணத்தை வேறொரு கோணத்தில் தருகிறார்.

                            ஈமொய்க்கும் 
                            என்கழுத்துப் புண்கண்டு
                            நாவினால் நக்கி
                            அன்பு செய்தாயே
                            அது ஒன்று போதும் காயடிக்கப்பட்ட
                            இல்வாழ்க்கைக்கு 

என்ற பாடலின் இறுதி அடிகள் தொனியானது தொக்கிநிற்கிறது.

இயற்கையில் தொடங்கி வாழ்வியலின் பல்வேறு கோலங்களைத் தீட்டிக் காட்டும் சொல்லோ வியமாகத் திகழ்கிறது முத்தொழில் என்ற கவிதை. அதே சமயம் இதில் தத்துவ விசாரமும் பொதிந்துள்ளது. நாலுபேர் என்ற கவிதை அகத்துறைக்கு நம்மை இட்டுச் சென்றாலும், அதில், ஐம்பூதங்களின் சேர்க்கையை எதிரும் புதிருமாக இணைத்துக் காட்டியுள்ளார்காடாறு மாதம்  என்ற புள்ளியில் இயங்கும்படியாக ஆறு என்ற கவிதை அமைகிறது.   ஏழு, எட்டு, ஒன்பது ஆகிய கவிதைகளில் அகத்துறையை உணர்த்தும் கவிதைகளாகத் திகழ்ந்தாலும் அவற்றில் தன்னுணர்ச்சியின் நிழற்சுவடுகள் பதிந்திருப்பதாகக் கருதமுடிகிறது.

பத்து என்ற எண்ணின் மீது கவிஞருக்குப் பற்றில்லை போலும்! பூஜ்ஜியத்தின் சேர்க்கைதான் அது என்ற காரணத்தாலோ என்னவோ அதனை விட்டுவிட்டார்.பத்து என்ற எண்ணுக்குச் சில தன்மைகளும், இயல்புகளும் இருப்பதனை இந்நூலில் எண்ணிப்பார்த்திருக்கலாம்ஆனால், பூஜ்ஜியத்தைப்  பற்றிப் பல கோணங்களில் சிந்திக்கிறார். இதற்கு மதிப்பு உண்டு என்பாரும், இல்லை என்பாரும் உண்டு. அது ஒருவகையில் அளவிறந்தது(infinitity). இன்னொரு கோணத்தில்,அது ஒன்றுமற்றது(nothingness) என்றும் சொல்கிறார். பூஜ்ஜியம் என்ற தலைப்பில், கவித்துணுக்காக

                              கூட்டிக் கழித்து வாழ்
                              பூஜ்ஜியம்  என்று
                              புரிந்துகொண்டு போ,  
                                       *** ***
                              இருந்து தொலைவது
                              தொலையாமல் இருப்பது
                              இரண்டும் சந்திக்க
                              கணக்கு முடிந்தது
                              விடை பூஜ்ஜியம்

என்கிறார்பூஜ்ஜியத்தை வெற்றிடமாகக் காட்டி, மனம் வெறுமை அடையுமெனில்,'நீ பூஜ்ஜியமல்ல; பூஜ்ஜியஸ்ரீ'  என்று சொல்லாடலினூடே புலன் கடந்த உணர்வும், எல்லையற்ற வெளியும் (eternity) வெளிப்படுகிறது.  

ஒன்றும் இல்லாதது என்ற கவிதை, கருத்துப் பொருண்மையிலும், உள்ளடக்கத்திலும், வடிவத்திலும் நகுலனின் வார்ப்பாகத் தோற்றம் தருகிறது. முடிவில்லாக் காத்திருப்பு என்ற கவிதை அகத்துறை சார்ந்தது. இதன் இன்னொரு பார்வையை முடிவிலி என்ற கவிதையில் காணலாம். கணக்குப் பரீட்சை : முடிவிலாத் திகில்  கனவு என்ற கவிதை சர்ரியலிச்சாயல் கொண்டது

'எண்களால் உணர்வுகளை அளந்து கோடுகளை' இந்த நூலில் வரைந்துருப்பது புதுமையானது. கணிதமொழியோடு ஓவியமொழியும் இணைந்து செயற்பட்டிருப்பது இந்நூலினைப் பெருமைப் படுத்தும்.

எண்ணை மையப்படுத்தி அதனைக் கவியோவியத்தில் தீட்டியுள்ள இந்தச் சொற்சித்திரம் ரசிக்கும்படி உள்ளது. தத்துவ மின்னல்களும், அகவெளியின் ஊர்வலமும் கலந்து காணப்படும் இந்நூல்  தமிழுக்குப் புதிய வரவாகவே கொள்ளத்தக்கது.


_________________________________________________________________________________________________________________