சனி, 30 டிசம்பர், 2017

மெளனம் கலைக்கும் மேகங்கள்
_______________________________________________________________________________

                                                                     இராம. குருநாதன்

இந்தியாவில் தமிழகத்தில்தான் மிகுதியான ஹைக்கூ நூல்கள், சிற்றிதழ்கள், மின்மடல் ஆகியவற்றின் வழியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஹைக்கூ இலக்கணத்தை நன்கு புரிந்துகொண்டு எழுதுவோர் சிலர்; இலக்கணத்தை அறிந்துவைத்திருந்தும் தாம் எழுதியிருப்பது ஹைக்கூவாக இருக்கிறதா என்று பிறரிடம் உரசிப்பார்க்கச் சொல்வோர் சிலர்; மூன்று அடிகள் இருந்தால் போதும் அது ஹைக்கூ தான் என்று நினைத்துக்கொண்டு புரிதல் இல்லாமலே எழுதுவோர் சிலர். இப்படிப் பலர் ஹைக்கூக் கவிஞர்களாக  வலம் வந்துகொண்டு இருக்கிறார்கள். வானில் எல்லா விண்மீன்களுமா சுடர் வீசுகின்றன. என்றாலும் இன்றைய இளைய தலைமுறை ஹைக்கூ கவிதையில் தஞ்சம் புகுந்திருப்பதைத் தடை செய்ய இயலாது. வலிமையுள்ளது வாழும் என்பது இதிலும் இருக்கவே செய்கின்றது

இந்நூலுக்கு எழுதிய சாகித்திய அகாதெமி விருதாளர் வண்ணதாசன்,

'ஹைக்கூக்கள்  சித்திரங்களை வரைந்து சித்திரங்களை அழித்துவிடுபவை என்று நினைக்கிறேன்அது ஒற்றைச் சித்திரத்திலிருந்து  நம்மை விடுவிக்கிறது. சித்திரம்  எழுதி, சித்திரம்  அழிந்த  வெற்றுக்கித்தானில்  அது நம்  விடுதலையை வைக்கிறது' என்கிறார்.

காட்சிப்படுத்திவிட்டு அதிலிருந்து விலகி வாழ்வின் யதார்த்தங்களை நுட்பமாக வடிவமைப்பதில் ஹைக்கூ ஓர் அழகிய வடிவம் அல்லவா

ஹைக்கூ நூற்றாண்டு அண்மையில் முடிந்திருக்கும் தறுவாயில் புத்தம் புதிதாக வெளிவந்திருக்கும் நூல் பிருந்தா சாரதியின் மீன்கள் உறங்கும் குளம் என்பதாகும். ஹைக்கூ வரலாறு தமிழில் எழுதப் படுமாயின் அதில் பலருக்கும் இடமுண்டுமூத்த தலைமுறைகளுக்கு  அடுத்து இளைய தலைமுறை   உருவாகிக்கொண்டு வருகிறது. இவ்விரண்டுக்கும் இடையே சிலரைச் சொல்லவேண்டும். அவர்களில் பிருந்தா சாரதியும் ஒருவர்

நூலின் தலைப்பே புதுமையானது.   மீன்கள் உறங்கும் குளம். மீன்கள் உறங்குமாஎப்போது உறங்கும்? பகலிலா? இரவிலா? சங்க இலக்கியப் பாடல் ஒன்று மீன்கள் இரவில் உறங்கும் என்கிறது.

மீன்கள் உறங்கும் குளம் 
விண்மீன்களை ரசித்தபடி
தூண்டில்காரன் 

வந்த வேளையை விட்டுவிட்டு, இயற்கையின் அழகை இரசிக்கும் அழகியல்வாதியா தூண்டில்காரன்? இரவில் உறங்கும் மீன்கள் இரையில் நாட்டங்கொள்ளுமா? அது தெரியாமலா தூண்டில் போடுவான் அதுவும் இரவில்அவன்  பகலில் என்ன செய்தான்? தூண்டில் போட இரவுப் பொழுதுதான் அவனுக்கு வாய்த்ததா? இரவில் வந்து ஏன் தூண்டில் போடவேண்டும்? சீர்த்த இடத்து மீன்களைத் தப்பவிடாத கொக்கை ஒத்தவனா அவன்?  விண்மீனைப் பார்க்கிறான் என்றால் அவன் அழகின் ரசிகனாகத்தான் இருக்கவேண்டும். குளத்தில்  தூண்டில்போட்டு ஒன்றும் அகப்படா நிலையில் அவன் விண்மீனை ரசிக்கிறான் போலும்!

விளக்கைப்பற்றியே முகநூலில் பல்வேறு கோணங்களில் கவிதைகளாகப்பதிவு செய்துவரும் இக்கவிஞர், இந்நூலிலும் விளக்கைச் சில கவிதைகளில் பதிவு செய்துள்ளார்.

                                                                                ஆளற்ற நள்ளிரவுச் சாலை
                                                                                 ஒற்றைக் கண்ணால் உற்றுப்பார்க்கிறது
                                                                                தெருவிளக்கு

இருட்டைக் களையும்  வெளிச்சத்திற்குக்கண்கள்தான் ஒளிவிளக்கு. ஆளற்ற  சாலையில் வேறு ஏதேனும்  தடம் தெரிகிறதா என்றுஉற்றுப் பார்க்கிறது விளக்கு.

       யார் கண்ணிலும் படவில்லை
       விடிந்த பிறகும் எரியும்
        விளக்கு

வேண்டிய நேரத்தில் எரியாத  விளக்கு, தேவையற்ற காலத்தில்  எரிவது உண்டு. இரவில் எரியவேண்டியது  விடிந்த பிறகு எரிவதை யார் கவனிக்கிறார்கள்.( மாநகராட்சி, நகராட்சியில் சிலசமயம்  பகலிலும் கூடத் தெருவிளக்கு  இப்படித்தானே!) எரியட்டுமே  நமக்கென்ன அதனால்  என்று அதனைக்கண்டுகொள்ளாமல் கடந்துபோவதும் உண்டு.  சிறுசிறு இயக்கத்திலும், செயல்பாடுகளிலும் கவனம் செலுத்த மறப்பது இயல்பாகிவிடுகிறது

                                 
                                                                                           உறங்குகிறான் வண்டியோட்டி
                                                                                           விழித்திருந்து வழிநடத்துகிறது 
                                                                                           லாந்தர் விளக்கு
 
 இருட்டாக இருந்தாலும் பழக்கப்பட்ட மாடுகளுக்கு வழித்தடங்கள் தெரியாமல் போகா. இருட்டு  நேரம். லாந்தர் விளக்கின் ஒளியில் அவை இயல்பாகச் செல்கின்றனஉடல் ஓய்வு கொண்டாலும் மனம் விழித்திருக்குமல்லவா? உடல் ஓய்வுற்றாலும் மனம் விழித்திருந்து உள்ளொளி காட்டுமே!     அதைக் குறிப்பதாயிருந்தால் மனத்திற்குக் குறியீடு விளக்கு.

 ஹைக்கூ  கவிதைகளில் உயிரினங்களை வைத்து, அவற்றின் வாயிலாகத் தம் எண்ணங்களைப் பதிவு செய்துள்ளதை ஜப்பானிய சாயல் கொண்ட தமிழ் ஹைக்கூவில் மிகுதியாக காணலாம். இயற்கையில் காணும் காட்சியைக் கருத்துத் திரட்சியில் பொருத்திக்காட்டும் நுட்பம், இத்தகைய கவிதை வடிவத்தைச் செழுமையாக்குகிறது. இக்கவிஞரும் உயிரினக்காட்சிகளூடே ஹைக்கூவில் பயணிக்கிறார்.  

                                                                            நல்ல முகூர்த்தம்
                                ஊமத்தம் பூவில் நாதஸ்வரம் வாசிக்கிறது
                                வண்ணத்துப்பூச்சி

ஊமத்தம் பூ, ஒரு  சிறுநாதஸ்வரம் போலவேகாட்சியளிக்கும். அதில்  வந்தமரும்  வண்ணுத்துப் பூச்சி கவிஞருக்கு நாதஸ்வரம் வாசிப்பதாகவே தோற்றம் தருகிறது.அப்பூவின் உச்சி அகலமாக மலர்ந்திருக்க, அங்கு வந்துறையும் வண்ணத்துப் பூச்சி, நாதஸ்வரம் வாசிப்பதை நினை வூட்டுகிறது. நல்ல முகூர்த்தம்   என்று கவிஞர் சுட்டியிருப்பது  பூவின் மலர்ச்சியைக் குறிப்பதாகக் கருதலாமா?

வண்ணத்துப் பூச்சியை வேறொரு கோணத்திலும் படம் பிடித்துக் காட்டுகிறார் கவிஞர்

                               வண்ணத்துப் பூச்சி வந்தமர்ந்தது 
                               ஊஞ்சல் பலகைக்கு
                               மலரும் நினைவுகள்.

ஊஞ்சலில்  ஆள் அமர்ந்திருக்கிறாரா என்று காட்டப்படவில்லை. அது ஆடிக்கொண்டிருப்பதாகவும் உணர்த்தப்படவில்லை. அசையும்  ஊஞ்சல் அசையாதிருப்பதாகவும் தெரியவில்லை. இந்நிலையில்   மலரும் நினைவுகள், அப்பூச்சியைக் காணும்போது தோன்றுகிறது. மனம்  வண்ணத்துப் பூச்சிக்குப் படிமம் ஆகிறதோ! ஜப்பானியக் கவிஞர் பூஷன்,

     கோயில் மணி விளிம்பு
     உறங்குகிறது
     வண்ணத்துப் பூச்சி

என்ற கவிதையோடு இணைத்துப் பார்க்கலாம்.


எறும்பு பற்றிய ஒரு கவிதை

                              எதிர்வரும் எறும்புகளிடம்
                              என்ன சொல்லிச் செல்கிறது
                              பரபரப்பாக ஒரு சிற்றெறும்பு

இக்கவிதையை  எறும்பு ஆற்றுப்படையாகக் கொள்ளலாமா? ஒற்றைச் சிற்றெறும்பு எதிரே வரும் அணிவகுத்து வரும் எறும்புகளுக்குச்சொல்வது என்ன? வழியில் ஏதேனும் ஆபத்து வரும் என்றெண்ணிப்  பாதுகாப்பாகப் போகச்சொல்கிறதாஅதைச்சொல்வதற்கான பரபரப்பா? அல்லது மழையின் வருமுன் உரைத்தலாஇனிப்புக் கிடங்கு அவைகளுக்குக் கிடைக்கும் இடத்தை ஆற்றுப் படுத்தி அனுப்புகிறதா? அணிவகுத்துச்செல்வது சற்றே விலகினாலும், மீண்டும் ஒன்று சேரும் கூட்டணிக்கான அறிவுறுத்தலா? சேமிப்புத்திட்டத்தை வகுத்துரைக்கிறதா?இப்படிப் பல்வேறான கோணங்களில் விரித்துரைக்கலாமா? எறும்பு உணர்த்தும் பாடம் பல வகையானது.

தோற்ற மாயை வெளிப்படுத்துவதாகப் பல ஹைக்கூக்கள் இந்நூலில் உள்ளன.
                                                                             மலையின் நிழலை 
                                                                             முந்தி நீள்கிறது
                                                                                         என்நிழல்   
v   
அஸ்தமன சூரியன் உதிக்கிறது 
              எதிர்அடுக்கு மாடிக்குடியிருப்பின் 
                                     ஒவ்வொரு ஜன்னலிலும்
v      
                                     நகர்கிறது
                                     சுவர் ஓவியம் 
                                     ஜன்னலின் நிழல்
v      
                                    கூரையைப்  பிய்த்துக்கொண்டு 
                                    கொட்டியது குடிசைக்குள்
                                    வெளிச்ச நாணயங்கள்
v      
                                    எதுகிழிசல்
                                    எது நாணயம்
                                    பிச்சைக்காரன் விரித்த துண்டு
v      
                                 குனிந்து பார்த்தேன் 
                                   வானத்தை
                                   குளத்து நீரில்
v      
                                   வானில் பறந்தபடியே
                                   ஏரியில் நீந்துகின்றன
                                   பறவைகள் 
v      
                                    உடைந்த நிலா 
                                    முழு நிலாவாகிறது 
                                   சலனம் அடங்கும் குளம்
v      
                                   கண்ணாமூச்சி ஆடுகிறது நிலா 
                                   வளர்பிறை
                                    தேய்பிறை

இந்த வகையிலான கவிதைகளை ஒரு விதத்தில் தோற்றமாயையோடும் (a kind of semblance ), ஒளி விலகலோடும் (refraction), எதிரொளியோடும்(reflection) தொடர்புபடுத்தலாம் என்று கருதமுடிகிறது. அதற்கேற்றவாறு அர்த்தப்படுத்திக் கொள்வதான காட்சிகள் இவற்றில் செறிந்துள்ளன.

காற்று பற்றிய கவிதைகளான,

                                                                                    இருகொடிகளையும்
                                                                                    ஒரே மாதிரி அசைக்கிறது
                                                                                    எல்லையில்  வீசும் காற்று 
v      
                                                                                   புள்ளி  வைத்து முடிப்பதற்குள்
                                                                                    கலைத்து விடுகிறது காற்று 
                                                                                    வேப்பம்பூக் கோலம்                                     

ஆகிய இரண்டும் வெவ்வேறான படப்பிடிப்புகள். அருவமான காற்று செய்யும் விந்தை அற்புதமானது. அனற்காற்றாகவும்,தென்றல் காற்றாகவும்,குளிர்க்காற்றாகவும்,புயற்காற்றாகவும்  வீசி இயற்கையின் திருவிளையாடலைக் காட்டும்எப்போது என்ன செய்யும் என்று தெரியாது. மெல்லத் தவழும் காற்று, புயலாய் வாழ்க்கையைப் புரட்டிப்போடுவதும் உண்டு.

புள்ளியிட்டுப் பூக்கோலத்தை முடிப்பதற்குள் காற்று அதனைக் களைத்துவிடுகிறது. திட்டமிட்ட எண்ணம் புள்ளியாகிறது. அதனை எண்ணிமுடிப்பதற்குள்ளாகவே அது நிறைவேறாமல் போய்விடுவதும் வாழ்க்கையில் உண்டல்லவா?அகத்தும்புறத்தும்வாழ்க்கையைப் புரட்டிப் போடுவது மனம் தானே!

எல்லையில் வீசும் காற்றை எனது உனது என்று சொல்லி  யாரும் உரிமை கொண்டாட முடியாது. அது எல்லையைக் கடந்து நிற்பது. எல்லையில் அசையும் இருகொடிகளை வீசும் காற்று அசையச் செய்கிறது. ஆனால் ஒரே மாதிரி அசைவதால், அது இரு நாடுகளுக்கும் உள்ள உறவின் அடையாளமா? அல்லது நிலமும், ஆட்சியும் இருநாடுகளுக்கிடையே முரண்பாட்டால் வேறு பட்டிருப்பினும்  இரு நாட்டுக்கொடிகளையும் ஒரே மாதிரி அசைக்கும் காற்று பொதுவானது அல்லவா! அது உறவை வளர்ப்பதற்கான அறிகுறியா? சமாதானத்திற்கான அடையாளமா? இது காற்றின் கையசைப்பா? மறித்துக்காட்டும் மாயையாஎன்பன போன்ற  கேள்விக்கணைகளை எழுப்பவல்லது இக்கவிதை.

                                                                                        தீராத தனிமை 
                                                                                        பொட்டல் காட்டில் 
                                                                             ஒற்றைச் செருப்பு

என்ற கவிதை, அரவமற்ற காட்டில் தனிமை குடிகொண்டிருக்கிறது.அது அச்சமூட்டக் கூடியதாக இருக்கலாம். யாரோ ஒருவர்  அதன் காரணமாக ஒற்றைச் செருப்பை  அனாதையாக விட்டுவிட்டு ஓடி இருக்க வேண்டும் என்ற கருத்தைத் தருமோ?

                                                                                        முட்டி மோதுகின்றன
                                                                                        தொட்டில் மீன்கள்
                                                                                       கண்ணுக்கெட்டிய தூரத்தில் கடல்

தொட்டி மீன்கள் சிறைவைக்கப்பட்டிருக்கின்றன. அதிலிருந்து மீளமுடியாமாமுட்டி மோதுவது எதற்காக? கடலைப் பார்த்ததும் தொட்டிலிருந்து விடுபடவேண்டும் என்ற உணர்வா? முட்டிமோதுவது என்பதால் கடலைப் பார்த்ததில் அவற்றுக்குள் எழும் ஆர்ப்பரிப்பா?


                                                                                            பாகனின் மகனுக்கும்
                                                                                            பணிகிறது
                                                                                            கோயில் யானை

பழக்கப்படுத்திய யானை, பாகனின் மகனைக் கண்டாலும் பணிகிறது. ஒரு வேளை  தனக்குப் பணியும் யானை தன் மகனுக்கும் பணியவேண்டும் என்று அதனைப் பழக்கியிருப்பானோ? பாகனுக்குப் பின் மகன் பாகனாக வந்தால் பணியவேண்டும் என்று யானை கருதுமோ? அல்லது அது தன்னிச்சையான அனிச்சைச் செயலாக இருக்குமோ! மேலதிகாரியை, வீட்டுக்குப் பார்க்கவரும் அவர்கீழ்ப்பணி புரியும் அலுவலர், அங்கிருக்கும் மேலதிகாரியின் மகனைக் கண்டதும் வணக்கம் வைப்பார்களே அது போன்றதா இது?  

இலை பற்றிய கவிதை,

                                                                                             இலையில் தவிக்கிறது
                                                                                             வானில் இருந்து
                                                                                            தரைதொடவந்த மழைத்துளி

பொதுவாக மழைத்துளி இலையில் பட்டு நிலத்தில் விழும். இடைப்பட்ட நிலையில் அது  இலையில் தவிக்கிறது. வாழ்க்கையிலும் கூட இப்படிப்பட்ட சூழல் உண்டுதானே! இடைப்பட்ட நிலையில் நின்று தவிக்கும்படியான நிலை வாழ்வில் இல்லாமல் போவதுண்டா!

இலை  தொடர்பான இன்னொரு காட்சி,

                                   நதியில் மிதந்து செல்கிறது 
                                   பழுத்த இலை
                                   நிறைவான பயணம்

வாழ்க்கை ஓட்டத்தில் முதுமை சிலருக்கு நிறைவான பயணத்தை அளிக்கலாம். பழுத்த இலை முதுமைக்கான படிமம்வாழ்வின் அனுபவம். வாழ்வின் இறுதிப் பயணம் அமைதியாகச் சிலருக்குக் கழியும்.


காலத்தைப் பற்றி ஒரு வித்தியாசமான காட்சி,

பல்லி பார்த்துவிட்டதைப்
  பார்த்துவிட்டது சுவர்ப்பூச்சி
 அசைவற்று நிற்கும் காலம்

இது ஒரு துல்லியமான காட்சி மட்டுமன்று. கூர்மையான பார்வை கொண்ட ஹைக்கூவும் கூட! இங்கே காலம் சலனமற்றுக் கிடக்கிறது.  இரையைக் கவரும் நோக்கத்தில் பல்லி. அதனைப் பார்த்துவிட்ட சுவர்ப்பூச்சி.இரண்டுமே அசையாதிருக்கின்றன. பூச்சியைக் கவ்விப்பிடிப்பதில் பல்லி அசையாதிருந்து திடீரென்று அதனைநோக்கிப்பிடிக்க நினைக்கிறது.செய்வதறியாது அசைவற்று நிற்கிறது பூச்சி. வாழ்க்கையில் இடர்ப்பட நேரும் பொழுது இவ்வாறு அமைந்துவிடுவது உண்டு. கவனமாக இருந்து தான் வேண்டியதை முடிக்க, காலம் பார்த்து நிற்கிறாதா பல்லி? காரியத்தை முடிக்க நேரத்தைக் கணிக்கக் காத்திருக்கிறதா?  காலம் மெளனமாகத் தெரிந்தும் தெரியாமலே நகர்ந்தும் நகராமலே நம்மைக்கடந்துகொண்டிருக்கிறது. கடந்தும் கடக்கமுடியாமலும் மனம், அசைவின்மையிலும்  கூடச் சில சமயம் மெளனமாய்த்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. கருத்தாழம் மிக்க ஹைக்கூ இது.

இப்படிப் பல ஹைக்கூக்களுக்கும் பொருள் சொல்லிக்கொண்டுபோவது சரியா? வாசகர் தங்கள் மனத்தில் தோன்றியவாறு, தோன்றும் வகையிலெல்லாம் பொருள் விரித்துக்கொள்வதுதானே ஹைக்கூவின் சிறப்பு.

பிருந்தா சாரதியின் எழுதிப் பழகிய கைக்கு எளிதில் ஹைக்கூ கைக்கூடியிருக்கிறது. எழுதிப் பழகிய கைகளுக்கு  இயல்பாகவே  ஹைக்கூ  தேன்துளியாய் வந்து விழுகிறதுதிரைப்படக்கவிஞர் பழநி பாரதி,    

தமிழில் நூற்றாண்டுத் தடம் பதித்திருக்கும் ஹைக்கூ பயணத்தில் பிருந்தா சாரதியின் இந்தத் தொகுதி கவனத்துக்குரியதாகக் குறிக்கப்படவேண்டும். பிருந்தாவின் பயணத்தில் மிக அழகான வாழ்வின் தரிசனங்கள்  வாய்த்திருக்கின்றன

என்று குறிப்பிட்டிருக்கிறார். ஒரு படைப்பாளியின் கூற்றை  இன்னோரு படைப்பாளி உணர்ந்து கூற்று இது. 'உண்மையில் வாழ்வின்  தத்துவத்தை, அதன் தரிசனத்தை இயற்கையிலிருந்தே அறிந்துகொள். அதுதான் அனுபவப் பாடம்  என்பார் பாஷோ. இக் கூற்றினை உறுதி செய்வது போல பிருந்தா கவிதைகளின் காட்சிப்புலத்தை விரித்துரைத்துக்கொண்டே இருக்கலாம்.    

அவருக்கு என் வாழ்த்துகள் பல.