ஞாயிறு, 22 மே, 2016

                                              சிறகடிக்கும் மனப்பறவை
_____________________________________________________________________________________________________________________________                                                                                                 
எதையும் புரியும்படியாகச் சொல்வது ஒரு வகை ; பூடமாகச் சொல்லிப் புரிந்து கொள்ள வைப்பது மற்றொரு வகை. நிகழ்வைக் காட்சிப்படுத்தி அதன்வழி உணர்வைப்பெறத் தூண்டுவது வேறொரு வகை. எவற்றையும்   அனுபவ வாயிலாக உணர்ந்துகொள் என்னும் ஜென்சித்தாந்தம் இன்னொரு வகை. கவிதை இவை எல்லாவற்றிற்கும் இடம் தருவது.
இவற்றை ஒரு சேரக் காண்பதற்கான கவிதை வாயிலை, 'ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக்கூடம்', 'பறவையின் நிழல்' ஆகிய இரண்டு கவிதைத்தொகுதிகள் மூலம் திறந்து வைத்திருக்கிறார் கவிஞர் பிருந்தா சாரதிஎளிமையேயானாலும் எதை எப்படிச் சொல்லவேண்டும் என்ற நேர்த்தி தெரிந்து இவ்விரு நூல்களையும் படைத்திருக்கிறார். நேரடியாகச் சொல்லும் யதார்த்தத்தின் இலகு நடையில் ஒவ்வொன்றையும் காட்சிப்படுத்துகிறார். அனுபவத்தின் தெறிப்பை, நவீனக் கவிதைச் சாயலை, சில சூழலை ஜென்னின் வார்ப்போடும் கூடக் காட்டுகிறார்குழப்பத்திற்குச் சிறிதும் இடம்வைக்காத எளிமையான மொழிநடைதான் இவரது படைப்பாண்மையின் வெற்றிக்கான அடையாளமாகும்.  காணுகின்ற காட்சிகளைக் கவிதை இழையில் பின்னியிருக்கும் அழகு நேர்த்தியான கவிநெசவாகும். சின்னச் சின்ன பிரயோகங்களால் சிறகடித்துப் பறக்கின்ற வார்த்தைகள் வண்ணத்துப் பூச்சியாய் நெஞ்சருகே வந்து நெருக்கம் கொள்கின்றன. பாடுபொருள் தேர்வினைப்  பக்குவமாகத் தெரிவு செய்து கொண்டு செதுக்கிய கருத்துச் சிற்பங்கள் கண்ணையும் நெஞ்சையும் கவர்ந்துவிடுகின்றன. அகவயமான கவிதைகளும், சில புறவயமான  கவிதைகளும் தென்றலாய் வருடுவதோடு புயலாகவும் உருமாறிப் புரட்டிப் போட்டுவிடுகின்றன.
ஒவ்வொரு கவிதையையும் காட்சி மூலம் நகர்த்தியிருப்பது  கவிதையின் பொருள் அடர்த்தியைப் போகிற போக்கில் எளிதாகப் புரியவைக்கிறது. 'ஞாயிற்றுக் கிழமைப் பள்ளிக் கூடம்' என்ற தலைப்புக் கவிதையே இதற்கு நல்ல சான்று. பள்ளிநாள்களில் அல்லாமல் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் அங்குச் செல்ல நாம் மறந்தாலும். அன்றைய நாளில் பள்ளிக்கூடக் காட்சியை நம் மனத்தில் பதியவைத்துவிடுகிறார். யதார்த்தமான காட்சியில் நிகழும் அக்கவிதை இத்தொகுதிக்கு அழகு சேர்க்கிறது. சிறுவன் மறந்துவிட்டுப்போன டிபன் பாக்ஸில் விருந்துண்ணும் எறும்புகள், கரும்பலகையில் தன் பாகங்களைக் குறித்து வரைந்திருப்பது கண்டு திகைக்கும் தவளை, தாய்மையின் ஏக்கத்தோடு வெறுமையான வகுப்பறைக்குள் அங்கும் இங்குமாய் ஓடும் அணில், விளையாட்டு மைதானத்தின் நிம்மதியைக் கெடுப்பதுபோல் பாலித்தீன் பையை உதைத்துத்தள்ளும் காற்று, வாதாம் மரத்தில் ஓய்வெடுக்கும் மரங்கொத்தி, ஒவ்வொரு வகுப்பறையையும் எட்டிப்பார்த்துவிட்டு அலுப்போடு ஆசிரியர் அறைக்குள் புகுந்து சுஜாதா டீச்சரின் ரோஸ் குடையில் வட்டம் போட்டு வந்தமரும் வண்ணத்துப்பூச்சி –  இப்படி இவற்றைக் காட்சிப்படுத்தியிருக்கும் ஞாயிற்றுக் கிழமைப் பள்ளிக்கூடப் பார்வை ஒரு புதுமைஇயல்பான காட்சிகளை இவ்வளவு எளிமையாகவும், யதார்த்தத்தோடும் கவிஞர் இலகுவான நடையில் சொல்லியிருப்பது எல்லோரையும் ஈர்க்கும்.   மின்சாரக் கொசுமட்டை என்ற கவிதை ஒரு வித்தியாசமான கோணத்தில் சொல்லப்பட்டுள்ளது. கொசுமட்டை வாங்கிய பிறகு  வேட்டைக்காரனாகிக் கொசுக்களைக் கொன்று குவிக்கும் கவிஞர், கொசுமட்டையை ஒரு குறியீடாகக் காண்கிறார். ரத்தம் குடிக்கும் எத்தனையோ பேரின் ஒட்டுமொத்த வடிவமாகக் கொசுவினைக் காட்டும் இவர், சட்டத்தின் சந்து பொந்துகளில் தப்பித்துப் பிழைக்கும் மோசடிப் பேர்வழிகளுக்குக் கொசு சற்றும் சளைத்த தல்ல என்கிறார். அதே சமயம், அவை குற்றம் புரிந்துவிட்டுத் தப்பித்து வாழும் மனிதர்கள் அளவுக்கு சாமர்த்தியசாலிகளாக இல்லை என்றும் சுட்டுகிறார். கொசு மட்டையை வைத்திருப்பதால் தனக்கும் தண்டிக்கும் அதிகாரம் இருப்பதாய் எண்ணிக் கொள்வது  பாடுபொருளில் ஒரு புதுமை.
இத்தொகுயில் உள்ள பல கவிதைகள் ஞாபகத்தின் நினைவலைகளாக உணர்த்தப்பட்டிருப்பது கவனத்திற்குரியதுகாதல் பற்றிய கவிதைகளில் இத்தகைய ஆதிக்கம் மிகுதி. பழையவற்றை எண்ணிப் பார்ப்பதான உத்தியில் சொல்வதாகவே அத்தகைய கவிதைகள் இருக்கின்றன. காதலுக்கான ஏக்கமும்காத்திருப்பும் ,தவிப்பும் மனத்தை நெருடும்படியாக அவை உள்ளன. தோரணம், அபயம், இன்னொரு நீ இன்னொரு நான், இரவுப் புரவிகள், என் மருந்து நீ உன் மருந்து நான், விடுமுறை நாளில் உன் நினைவு,வலி, கூடல் தேசம் பழிவாங்கல் முதலியவை இப்படிப்பட்டவை.
தவிட்டுக்குருவி பசுமாட்டின் மீது அமர்ந்தும், பறந்தும் மறுபடியும் அதன் முதுகின் மீது வந்தமரும்படியான காட்சியைப் பார்த்துவிட்டு, காதலிக்காகக் காத்திருக்கும் கண்களை, 'நீ வரும் திசைநோக்கிப் பறந்து பறந்து போய்வரும் என்று கண்களோடு இணைத்துக்காட்டுவதும்( தவிட்டுக் குருவிசாலையில் நடந்து போகும்  அழகியின், 'நடையில் தெரிகிறது மனதில் நுரை பூத்து நகரும்  நதி ( வண்ணக்குடை பிடித்து வருபவள்) என்று   காட்சிப்படிமத்தோடு காட்டுவதும், தூக்கம் வெளியேறிய அறையில் பாய் விரித்துப் படுத்திருக்கிறது விதி(காதலின் குருதி) என்று  வரும் அரூபப்படிமமும் ரசிக்கும்படியாக உள்ளன.
அடுக்ககக் குடியிருப்பில் இறந்துவிட்ட ஒருவரைக் காட்சிப்படுத்தும் சூழல் வித்தியாசமானது. அக்கவிதையின் இறுதியில், பாடை கட்டும் பெரியவரின்,   அனுபவ  வெளிப்பாட்டில், ' சாவக்கூட இந்த ஊர்ல இடமில்லாமல் போச்சுஎன்று அவர் முணுமுணுப்பது நகரிய நாகரிகத்தின் நெருக்கடியை உணர்த்தும். .  
இந்தத் தொகுதியில்  மிகவும் குறிப்பிடத்தகுந்த கவிதை' அந்நியமாதல்'. வெட்டப்பட்ட ஆட்டுத்தலையின் பார்வையில் அக்கவிதை இயங்குகிறது.
                           வெட்டப்பட்ட ஆட்டுத்தலை 
                           வெறித்துப் பார்க்கிறது
                           தோலுரித்துத்
                           தொங்கவிடப்பட்டிருக்கும் 
                           தன் உடலை    
இக்க்குறுங்கவிதை முற்றிலும் மாறுபட்ட பார்வையைத் தருகிறது. நிசப்தமான கணத்தில் ஆட்டின் தலை எதிரே தொங்கிக்கொண்டிருக்கும் தன் உடலைப் பார்ப்பது என்பது சொல்லில் வடிக்க முடியாத ஓர் அவலம். மனித அவலத்தின் பல்வேறு பரிமாணங்களுக்கு இடந்தரும்படியான குறியீட்டுக் கவிதை இது. சொல்லப் பட்டிருக்கும் விதம் கூர்மையான பார்வை என்றாலும் கவிதையின் உச்சம் அதன் இறுதி வரிகள்.

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள குறுங்கவிதைகள் சில, கருத்துகள் தெறிக்கும்படியாக வீறிட்டு எழுவதைக் காணலாம்.

                           அற்புதங்கள் நிகழ்வது
                           கணங்களில்
                           காத்திருக்கவேண்டும்
                           யுகங்களில்

எல்லா நிகழ்வுகளுக்கும் உரித்தான ஒரு பொதுபுத்தியை இவ்வாறு சுருக்கென்று உணர்த்துகிறது இக்கவிதை

சமுகத் தளத்தில் இயங்கும்  கவிதைகள் இத்தொகுதிகள் குறைவு என்றாலும்,நான்காவது கால், தண்ணீர் நாட்கள், நீராண்மை போன்ற சில கவிதைகளில் சமூகத்தின் மீது கவிஞர் கொண்டிருக்கும் அக்கறையை உணர்த்துவதாய் உள்ளனசென்ற ஆண்டு இறுதியில் சென்னையைப் புரட்டிப் போட்ட வெள்ளமும் இயல்பாக அவற்றில் சித்திரிக்கப்பட்டுள்ளன.  
                             எங்கும் நீர் 
                             குடிப்பதற்குத்தான்
                             இல்லை
என்ற அடிகளில் அனைத்தையும் உணர்த்திவிடுகிறார். ஆங்கிலக் கவிஞர் காலரிட்ஜ் வரிகளை நினைவூட்டிச் செல்கிறது இவ்வரிகள்அவன் கடலுக்குச் சொன்னதைச் சென்னை வெள்ளத்தோடு நினைத்துப் பார்க்கச்செய்கிறதுநீராண்மை  என்ற கவிதையின் இறுதி வரிகள்  சமூகப்  பொறுப்புணர்ச்சியைக் காட்டுகிறது.

 'அடி' என்ற கவிதையில் சொல்லப்பட்டிருக்கும் தொடக்க வரிகளான
   'கைதவறித் தரையில் விழுந்த
   அஞ்சறைப் பெட்டியின்
   தானியங்கள் போல்
   கலந்துகிடக்கின்றன,
   பிறந்தது முதல்  இன்று வரையிலான
   ஞாபகங்கள்'
என்ற அடிகள், இளமைக்காலந் தொட்டு இன்று வரையிலான கவிஞரின் தன்னுணர்ச்சிப் பயணத்தின்  தொடர்ச்சியான விளைவுகளின் பதிவுகள் என்பதை உணரவைக்கின்றன.

 நினைவுப் புற்று, அஞ்சலி மலர்கள், விதி, வினையெச்சம் முதலிய கவிதைகளின் தத்துவஙகளின் தேரோட்டத்தைக் காணமுடிகிறதுஅஞ்சலி மலர்கள் உமர்கய்யாமின் ரூபாயத்தில் வரும் மலர்கள் பற்றிய கவிதையோடு ஒப்புநோக்குதற்குரியது. 'வினையெச்சம்,' ஒரு சிறுகதைக்கான விதையைத் தூவிச் செல்கிறது.

கவிஞரின் மனத்திரையில் இருந்து விரியும் காட்சி மொழியே கவிஞரின் பலமாகத் தெரிகிறது. அது ஒவ்வொரு கவிதையினூடும் பரவி இருப்பது கவிஞரின் தனித்தன்மையைக் காட்டுகிறது.

'பறவையின் நிழல்' காதலை மையப்படுத்திய நூறு குறுங்கவிதைகள் கொண்ட படைப்பு. காதலை மிகவும் மென்மையாகச் சொல்லிவிடத் தம்மால் இயலும் என்பதை நிருபித்திருக்கும் தொகுதி இது. இதில் காதலை வண்ணக் 'க்ளைடாஸ்கோப்' காட்சிகளாகக் காணவைத்துள்ளார். முற்றிலும் அக உணர்வின் வெளிப்பாட்டினை உணர்த்திக்காட்டும் கலை இவருக்கு இயல்பாக வாய்த்திருக்கிறது.

இனிப்பைத் தின்றுவிட்டுப் பிசுபிசுப்பான விரல்களைக் குழந்தை சுவற்றில் தடவினால், அது கைவைத்த இடம் இனிப்பாவது போல, பக்கந்தோறும் காதல் சுவையை விடாய் தீருமளவுக்குக் கொடுத்திருக்கிறார் கவிஞர். இதிலும் கூடக் காதலின் ஞாப அலைகள் அவ்வப்போது வந்து மோதுகின்றன. துப்பட்டாவின் காற்றுக் கூடக் காதலுக்குக் கைகொடுக்கும் அளவிற்குத் திளைக்கவும் திகைக்கவும் செய்கிறது. யாரிடத்தும் அனுமதிச் சீட்டுப் பெறாமலே நெஞ்சுக்குள் புகுவது  அல்லவா காதல்! கண் நடத்தும் கணநேர நாடகத்தில்,  காதல், நதி மீது செல்லும் நுரைப்பூக்களாக மென்மையான வார்த்தைகளால் எளிதாகப் பயணிக்கின்றது. எனவேதான், 'மண்ணில் விழுந்த விதை மரமாவது போல் என் கண்ணில் விழுந்த நீ காதலாகிவிட்டாய்'. கண்தானே காதலில் சிறப்பிடம் பெறுவதுகவிஞர் பார்வைக்குக் 'கண்ணாடி அணிந்த கண்களும் தொட்டி மீன்'களாகிவிடுகின்றன. அதன் தொடர்ச்சியாக, 'மழைத்துளியை ஏந்தும் சிப்பியாகிறது கண் உன்னைக்காணும்போது- எனக் கவிதையை  இவ்வாறு  நீ என முன்னிலை ஒருமையில் சொன்னால், படிப்போர் நெஞ்சில் காதல் நெருக்கம் கொள்ளாமலா போய்விடும்?. இளமையின் இனிய நாட்களை அசைபோடக் காதல் துணைவராமலா போய்விடும்?. 'நீ பிறந்த அன்றுதான் மழை வேண்டி கோயிலில் யாகம் நடந்ததாகச்' சொல்வதும், 'வானவில் கூட நீ பிறந்த பிறகுதான் பொறாமைப்படத் தொடங்கியது' என்று சொல்வதும் தோற்றுவிடாத காதலுக்குத் தோற்றுவாயாக வெளிப்பட்டுள்ளன.  வாமன வடிவில் காதலை இவ்வாறு நச் சென்று சொல்வதால் அது பச் சென்று நெஞ்சில் ஒட்டிக்கொண்டுவிடுகிறது. 'நீ வரும்வரைதான் அது பேருந்து பிறகு விமானம்எனச் சொல்லியிருப்பது காதலின் விரைவு, வேகம், வேட்கை  ஆகியவற்றை வெளிக்காட்டி விடுகிறது. அந்தக் காதலுக்கான காத்திருப்புப் பூங்காவாக இருந்தால் எப்படி இருக்கும்கவிஞர் சுட்டுவது போல,
உனக்காக இடம் பிடித்து
வைத்திருக்கிறது
பூங்காவின் இருக்கையில் ஒரு
பூவரசம் பூ 

என்று சொல்லியிருப்பது அஃறிணையும்  கூடக் காதலுக்குரிய இடத்தைத் தேர்ந்து வைத்திருக்கிறது. காதல் கொண்டுவிட்ட மனம்  ஆழமானதுஎனவேதான், 'யாராவது வீட்டுக்கு வழிகேட்டால் கூட, அவர்களை வீட்டில் கொண்டுவந்து விடுவது' என்று கவிஞர் சொல்லியிருப்பது, காதலில் கட்டுண்டவர்களுக்கே தெரியும். அதனை இயல்பாக வெளிப்படுத்திவிடுகிறார் கவிஞர். காதலர் மனம் குழந்தை மனமாகவே இருக்கும். இதனைக் காட்சிப்படுத்த எண்ணிய கவிஞர்,
          'காற்றில் ஆடும் 
          வாழை மர நிழலுடன் விளையாடும்
          நாய்க்குட்டியின் 
          பிள்ளைத் தனத்தை ஒத்திருக்கிறது 
          என் காதல்
எனச் சொல்லவைக்கிறது.     காதல் மொழி உலக ஒருமை மொழி. அதனை எந்த மொழியில் எப்படிச் சொன்னாலும் இனிக்கவே செய்யும். இதனைச் சாத்தியப்படுத்தி யிருக்கிறார் கவிஞர்
                   வானில் பறந்தாலும் 
                    பறவையின் நிழல்
                    மண்ணில்தான்
                    நிழலைப் பின்தொடர்கிறேன் நான்
                    எக்கணத்திலும் பறவை
                    என்தோளில் வந்து அமரும்
                    என்ற நம்பிக்கையோடு

இது காதலுக்கு மட்டுமன்று. நெஞ்சில் வந்து அமர்ந்துகொண்டல்லவா இவரிடம் களிநடம் புரிகிறது கவிதை என்னும் மனப்பறவை.
_________________________________________________________________________________________________________________

     இராம. குருநாதன் 4\28, பழைய பங்காரு குடியிருப்புகே.கே.நகர் மேற்கு, சென்னை. 78