திங்கள், 5 செப்டம்பர், 2011


வெறுமை வெளிகள்
_____________________________________________________________________________

இறந்த காலம், எதிர்காலம் -எதுதான்
இங்கே நிகழ்காலம்,?
காலம் என்பது விளையாட்டா?
ககனம் மீதோர் தாலாட்டா;:?

தேட்டம் மிக்க மானிடத்தில்
தேடிப்பெறுவ தொன்றுண்டா?
ஆட்டம் இங்கே ஆயிரங்கள்
அணுவின் சோதனை மனவெளிகள்!
ஓட்டம் விரையும் பந்தயத்தில்
ஒருநொடிப் பொழுதில் அழிவெல்லை!
வீட்டை விட்டு வெளிவந்தால்
வீட்டை நினைக்கும் விந்தைமனம்!
வீடும் காடும் வெறும்வெளியா?
விட்டு வருவதே விடுதலையா?
நாட்டம் இல்லா வாழ்வினிலே
நடக்கும் யாவும் கேளிக்கையா?
வாட்டம் நீக்க வழிகளுண்டா?
வழியும் பழியும் யாரிடத்தே?
கூடிக் கலையும் நாடகத்தில்
கூட்டிக் கழித்த மிச்சமென்ன?
பாடிக் களித்த வாழ்க்கையதில்
படிந்த பாசி யகன்றிடுமா?
சீலமிக்க நதியினிலே
செல்ல மறுக்கும் மனஒடம்!
ஓலமிக்க மானிடத்தின்
ஒற்றைப்பாதை வழிநடப்பில்
ஓடிக்கொண்டே இருக்கின்றேன்,
ஓடிக்கொண்டே இருக்கின்றேன்

நான்
காலம் என்னும் திரைக்கடலில்
கரையேறத் துடிக்கும் சிற்றெறும்பு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக