வெள்ளி, 7 அக்டோபர், 2016

மெல்லிய இழையின் மீதோர் கவித்துவ நடனம்
ஒன்றைச் சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் உத்தி புதிதில்லை என்றாலும் கவிதை உலகில் நீண்ட காலமாகவே இந்த உத்தி இருந்துவந்திருக்கிறது. சுருக்கமான வடிவில் கவித்துவத்தைக் காட்டுவது என்பது சற்றே கடினம். அதில் நுட்பமாக உணர்த்தும்  திறம் எல்லோருக்கும் வந்துவிடாது.  
ஒரு கருத்தை நுட்பமாகவும் செறிவாகவும் சொல்வதற்குரிய வடிவமாக ஹைகு  திகழ்கிறது. கவிதை விளைச்சலில் இது ஜப்பானிய சாகுபடி.  காட்சியினூடே ஒரு கிளர்ச்சியைத் திடுமென்று அதிர்வலை போல-மின்தாக்குதல் போலத் தருவதற்கு அசாத்திய திறம் வேண்டும். ஹைகுவின் அடையாளமும், தனித்தன்மையும் அதுவே! எதையும் அசலாகக் காண்பதோடு நின்றுவிடாமல்,  அனுபவமாகக் காணவேண்டும் என்ற வரையறையைக் கொண்டு வளர்ந்தது ஹைகு. எல்லாவற்றையும் கைக்குள் அடக்கிவிடமுடியும் என்ற அறிவியல் பிம்பம் கவிதையுலகிலும் எதிரொளியாகிவிட்டது. இளைஞர் பலரை ஈர்ப்பதற்கும் அவ்வடிவம் எளிதாகிவிடுகிறது. ஆனால் மூன்று அடிகளில் எழுதுவதெல்லாம் ஹைகு ஆகிவிடுவதில்லை. செறிவும், நுட்பமும், கருத்தாழமும், இயற்கையின் அழகைப் பொருத்தும் இணைவும் நம்மை அதிரடியாகச் சிந்திக்கவைக்கும் ஹைகு வடிவம் ஓர் அருங்கலை.  
மழை பெய்த சாலையில் சிந்திக்கிடக்கும் 'பெட்ரோல்' அந்நீரில் கலந்து சில மணித்துளிகளில் பல வண்ணங்களாக விரியும் காட்சி போல, சில எண்ணங்களை மனத்தில் இருத்திச் சிந்திக்கவைக்கும் குறுங்கவிதை மனத்தை ஈர்ப்பதாகும். போகிற போக்கில் (en passant) ஒரு நிகழ்வைத் திடுமென்ற உணர்வில் சொல்லிச் செல்லும் அருங்கலையை  ஹைகு  அமைதியாகச் செய்கிறது.  இதுதான் ஹைகுவை ஏனைய கவிதை வடிவங்களை விடத் தனித்த அடையாளத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது.
திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளருமான லிங்குசாமியின் இரண்டாவது குறுங்கவிதைத்தொகுதி 'செல்ஃபி எடுத்துக்கொள்கிறது ஒரு மரம்'  என்ற பெயரில் அண்மையில் வித்தியாசமாக வெளிவந்துள்ளது. வடிவ நேர்த்தியிலும், உள்ளடக்க நுட்பத்திலுமாக ஒரு புதுமை படைத்துள்ளதுமூன்று அடிகளிலும், இரண்டிகளிலுமாகப் பயணிக்கிறது இந்த நூல். லிங்குசாமி ஒவ்வொன்றையும் காட்சிப்படுத்தும் விதம் அலாதியானது. சுயத்தின் அடையாளத்தை வரித்துக் கொண்டு  கருத்து மின்னலைப் பாய்ச்சியுள்ளார். அசலான தமது கவிதை வெளிப்பாட்டோடு, தம்மால் உணரப்பட்டு ரசித்த ரசனையின் விளைவுகளையும்  அழகுறக் கவிதையாக்கியிருக்கிறார்.  'இயற்கையின் வாயிலாகப் பெறும் அனுபவத்தின் உள்ளுணர்விருந்து, ஒரு கருத்தைப் உருவாக்கு' என்ற ஜென்னின் வார்ப்பில் வடித்தெடுக்கப்பட்ட கவிதைகள் இந்நூலில் காணப்படுகின்றன. இயற்கை அழகியல் என்று சொல்லத்தக்க வகையில் அவரது கவிதைகள் நம் இதயத்திற்கு நெருக்கமாய் வருகின்றன. 'கேமரா' கண்ணுக்குப் புலனாகும் காட்சிகளைக் கவினுற நேர்த்தியாகத் தரமுடியும்  என்பதையும், கவிஞர்  வெற்றிபெற்றுள்ளார். நாம் காணுவதையும், காணத்தவறிக் கடந்துசெல்வதையும் கவிஞர் அழகுறப் படம்பிடித்துக் காட்டுகிறார்
இயற்கையைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர் உள்ளம், மெல்லிய இழையில் கவித்துவம் நிறைந்ததாய்க் களிநடம் புரியத்தொடங்கிவிடுகிறது. சூரியனின் ஒளிக்கீற்றுகளாய்க் கவிதை உள்ளுக்குள் சுருக்கமான மனப்பதிவாகிச் சுடர்வீசுகிறது. அதை விரித்துரைப்பது அவர் வேலை அன்று. நாம்தான் அவர் உணர்த்தும் பொருளை உள்வாங்கிக்கொள்ளவேண்டும். (The art of the artist is to give the art, but the business of the critic is to reveal the art)   
கவிஞர் இயற்கையை இயல்பாகக் காட்டும் காட்சிகளில் எப்படிப்பட்ட மின்னலைகளை உருவாக்குகிறார்!.  'மின்சாரத்தைத் தொட்டால்தான் 'ஷாக்', மீனாவைப் பார்த்தாலே 'ஷாக்' என்று மின்னதிர்வைப் போல ஒரு கவிஞன் எழுமிய கவிதை இங்கு நினைவு வருகிறது. இப்படிப்பட்ட மின் அதிர்வு இவர் கவிதைகளிலும் உள்ளது. 
இயற்கையில் அன்றாடம் காணும் காட்சிகளைக் குறிப்பாக- அணில், நிலவு, மரங்கொத்தி, குயில், மரம்பூ  ஆகிய காட்சிகள், கவிஞர் மனத்தை அழகிய கவிக்கோலங்களாக வரைய வைத்துவிடுகின்றன. புறவெளியில் காணும் காட்சிகள் அனுபவத்தில் அகவுணர்வுகளாக வெளிப்படும்போது மொட்டாக அல்ல… .. சட்டென்று விரியும் மலராகவே மனத்தில் மலர்ந்துவிடுகின்றன.
குழந்தைகள் விளையாடும் மரத்தடியில்
பழத்தை நழுவ விடுகிறது
அணில்

இக்கவிதையில், பழத்தை, அணில் நழுவ விடுவது இயல்பான காட்சி. அதனைக் குழந்தைக்காக நழுவ விடுவதாக உணர்வதும், உணர்த்துவதும் கவிதை மனம். பழம் எது என்று சொல்லப்படவில்லை. அணிலுக்கு அந்தப் பழம் பிடித்திருக்கிறதா? பிடித்திருந்தால் நழுவ விடுமா? அல்லது பிடிக்காமல் போனதால் நழுவ விட்டதா? பாதிப் பழத்தை ருசித்துவிட்டு நழுவ விட்டதாகுழந்தைகளின் கைகளுக்குப் பழம் கிட்டியதா? குழந்தைகள் அணிலுக்கு நன்றி சொன்னதா? போன்ற அடுக்கடுக்கான கேள்விக் கணைகளை எழுப்பிக்கொண்டே போகலாம்கவிதையில் இந்நிகழ்வு இதோடு முடிந்துவிடுகிறதா? அதற்கு அப்பாற்பட்டுச் சிந்திக்கத் தூண்டுகிறதா? இயல்பான காட்சி ஒன்றைக் காட்டி அணிலுக்கு ஓர் இரக்கத்தை ஏற்படுத்த இயற்கை காரணமாவதையும், மரத்தின் மேலிருந்து அணிலும், கீழே விளையாடும் குழந்தைகளும் எப்படிப்பட்ட மனநிலையில் இருந்தன என்பன போன்றவற்றை எண்ணிப்பார்க்க இடம் தரும்படியான கவிதை.     
இயல்பான காட்சி ஒன்றை நாம் ஊன்றிக்கவனிக்கத்தவறிவிடுகிறோம். கவிஞர்களின் பார்வைக்கு எதுவும் தப்புவது இல்லை.
செருப்பில் ஏறிப்பார்த்துக்
காலுக்குப் பொருந்தாமல் இறங்கிச் செல்கிறது
எறும்பு.
கவிஞரின் கூரிய கண்களுக்கு மட்டுமே புலனாகும் இந்தக்காட்சியைக் கவிதையாக்கி இருப்பது நுண்ணிய பார்வைஎறும்பின் இயல்பான நடவடிக்கை கவிதைக்குரியதாகிறது. தனியாகக் கிடக்கும் செருப்பில் ஏறி இறங்கிச் செல்கிறதா? அல்லது அணிந்து கொண்டிருக்கும் செருப்பில் ஏறி இறங்கிச் செல்கிறதா? என்பதல்ல கேள்வி. அது தன்னிச்சையாக ஏறியும் இறங்கியும் செல்வது,  அதன் இயல்பு. அந்நிகழ்வு ஒரு வகையில் பார்ப்பவரின் பார்வைக்கு அனிச்சைச் செயலாகிறது. வாழ்க்கையில் எது பொருந்திவருகிறதோ அதில் தன்னைப் பொருத்திக்கொள்ளும் நிலை மனிதனிடத்து உண்டு. தமக்குப் பொருந்தாதவற்றை விலக்கிவிட்டுக் கடந்துபோவது வாழ்வியலில் நிகழ்வதுதான்இது ஓர் அருமையான காட்சிபடுத்தல் ஆகும்.
மரத்தைப் பற்றிய  பார்வைகள், கவிஞரிடத்துப் புதுபுதுக்கோணங்களில் புறப்பட்டு வந்துள்ளன..
மரத்தைச் சாய்த்துத்தான் 
இந்த வீணை செய்யப்பட்டிருக்கிறது
ஒரு முறை மீட்டி வை
ஒரு வனம் உருவாகட்டும்.
மனித வாழ்வில், மரம் பயன்படாத இடமே இல்லை. தொட்டிலிலிருந்து கல்லறை வரை அதன் பயன்பாடு நாம் அறிந்த ஒன்றுதான்! மரத்தை அழித்துச் செய்யும் கோடரியின் கைப்பிடிக்கு மரமே உதவுகிறது. அழிவில் இருந்து ஆக்கம் உருவாக அது தேவையாக இருந்துவருகிறது. இது ஒரு புறமிருக்க, இன்னொரு புறம், மரத்தால் செய்யப்படும் இசைக்கருவியை மீட்டுவதன் மூலம் பயிரினம் வளர்வது என்பது. இங்கு மரத்தால் செய்யப்படும் வீணை மீட்டப்படுமானால் ஒரு வனமே உருவாகிவிடும் என்ற சிந்தனை, ஒன்றிலிருந்துதான் ஒன்று உருவாகிறது என்பதனைக் காட்டுகிறதுஒன்றன் மூலம்  உருவாகும் பொருள் அழிக்க அன்று; ஆக்கத்திற்கே என்பது பெறப்படுகிறது! இக்கவிதையில் மரம் பயன்படும் விதமும், வீணையை மீட்ட வனம் உருவாகவேண்டும் என்ற சூழலியல் வளர்ச்சிக்கான ஆக்கமும் விதைக்கப்பட்டுள்ளன.
மரத்தை மரமாகக் காணுவதும், அதனையே நாம் நினைக்கும் ஏதேனும் ஒரு பொருளாகக் காணுவதும் (மரத்தை மறைத்தது மாமத யானை- திருமந்திரம்), மரத்தோடு மனம் ஒன்றிப் போவதுமான ஒரு நிலையை அத்வைதமாகக்கூட நினைக்கத்தோன்றும். ஆனால் அதே மரம் போதனை ஊட்டுவதாகவும், போதிமரமாகவும் இருந்திருப்பது புராண, வரலாற்று  உண்மை. கோயில்களில், ஆலமரத்தின் கீழ் தென்முகக் கடவுள்(தட்சிணாமூர்த்தி) ஞான உபதேசம் புரியும் காட்சியும்அரசமரத்தின் கீழ் புத்தர் போதனை பெற்ற நிகழ்வும் நாம் அறிந்தவை. மரத்தைப் பற்றிய குறுங்கவிதையில் இதனைக் கவிஞர் வேறொரு கோணத்தில் படம் பிடிக்கிறார்
மரம் வைக்கும்போது நீங்கள் ஒரு
புத்தரையும்
வரவேற்கிறீர்கள்.

ஒரு கொள்கையை, போதனையை முன் வைக்க அருளாளர்கள் தேவைப்படுகிறார்கள். சமய ஞானிகள் உருவானதும் இப்படித்தான். மரத்தடியில் இருந்து ஞானம் பெறுவது ஒருவகையெனில், மரமே போதிக்கிறது என்ற நிலையில்,
                                மரத்தடியில்
வகுப்பெடுக்கிறார் ஆசிரியர் 
கற்றுக்கொடுக்கிறது மரம்

என்ற கவிதை நம் கவனத்தைத் திருப்பும்படியான கவிதை. மரம் கற்றுக் கொடுப்பது யாருக்காக? ஆசிரியருக்கா? மாணவருக்கா?  என்ற  கேள்வி தொக்கிநிற்கிறது. மரம் என்ற ஒன்றைப்  படம் பார்த்து அறிந்துகொள்வதற்கும், நேரிடையாக அதனைக் காண்பதற்கும் எத்துணை வேறுபாடு? எதையும் இயற்கையினின்றும் அறிந்துகொள் என்ற அனுபவத்தை வெளிப்படுத்தும் ஜென் சிந்தனைக்கு இக்கவிதை ஒரு விருந்து.

அறியாமையிலிருந்து  ஒன்றை அறிந்துகொள்ளவும் தெரிந்துகொள்ளவும் பகுத்தறிவு தேவையாகிறது. எதையும் பகுத்து ஆயவேண்டும் என்பது அறிவியல் சிந்தனையின் ஒரு கூறு. இதன் எதிரொலியாக,


கொஞ்சம் குழம்பித்தான் போயிருக்கும்
பறவை
முதல் விமானத்தைப் பார்த்து
பறவையைக் கண்டு; விமானம் படைத்தான்; இது அறிவியலின் பரிணாம வளர்ச்சி. ரயில் கண்டுபிடிக்கும் முன்பு வரை, ரயிலையே பார்க்காத மனிதன், அதனை முதன்முதல் பார்த்த போது அதிர்ச்சியும், அச்சமும் கொள்ளாமல் இருந்திருப்பானா? பறவைக்கு மட்டுமன்று;மனிதர்க்கும் அந்த அதிர்ச்சி இருந்திருக்கிறது. ஆனால், அவன் பகுத்தறிவுடையவன். வாழ்க்கையில் அறியாமையிலிருந்து அறிவுத்தேட்டத்திற்கும்(from ignorance to reason) மருட்கையிலிருந்து உண்மையுணர்விற்குமான( from illusion to reality)  அனுபவத்தைத்தான் பறவையாகப் படம் பிடித்துக்காட்டியிருக்கிறார்

அமைதிக்குப் பின் அதிர்ச்சி காத்திருக்கும்; அதிர்ச்சிக்குப் பின்னும் அமைதி நிலவுவதும் உண்டு.புயலுக்குப் பின் அமைதி என்பது போல. இதைக் காட்சிப்படுத்தும் விதமாக
மான் அருந்தும் நீரில்
புலியின் பிம்பம்
என்ற கவிதை அமைந்துள்ளதுஇதனைச் சற்றே மாற்றி(vice versa), புலி அருந்தும் நீரில் மானின் பிம்பம் என்றால் அக்காட்சி எப்படி இருக்கும்? புலி அருந்தும் நீர்ப்பக்கம் மான் போவதற்கு வாய்ப்பில்லை. அச்சம் அதனைச் சூழ்ந்துகொள்ளும். ஆனால், அமைதியாக நீர் அருந்தும் மானுக்கு, புலியின் பிம்பம் தெரியுமென்றால் மானின் மனநிலை எப்படி இருக்கும்? அதிர்ச்சியும் அச்சமும் ஆட்கொண்டுவிடாதா?  மனித வாழ்விலும் இந்த இரு நிலைகளும் உண்டு. புலியின் பிம்பம் அதிர்ச்சிக்கும் அச்சத்திற்குமுரிய குறியீடாகிறது
நிலவைப் பற்றிய சில கவிதைகள் இதில் உள்ளன
தற்கொலை செய்துகொள்ள மனமில்லை
கிணற்றில்
நிலைவைப் பார்த்த பிறகு
காதல் தோல்வியுற்றவன் பார்வையில், இக்கவிதையை நோக்குவோமானால், தற்கொலை செய்துகொள்ள இருந்தவன்,  நிலவைத் தன் காதலியின் முகமாகக் கற்பித்துக்கொண்டால், கிணற்றில் இருக்கும் நிலவைக் கண்டு தற்கொலை முடிவிலிருந்து அவனது மனம் மாறலாம். கிணற்று  நீரில், அசைவற்று அமைதியாகக் கிடக்கும் நிலவு, அவன் மனநிலையை அமைதியாக்கித் தற்கொலை எண்ணத்திலிருந்து அவனை விடுபடச்செய்திருக்கலாம் போன்ற எண்ணங்களுக்கு வித்திடும் வகையில் அமைந்திருக்கிறது இக்கவிதை.

அமைதியைச் சுட்டும் போது, மக்கள் வழக்கில் மயான அமைதி என்று சொல்வதுண்டு. இதனைக் காட்சிப்படுத்த நினைத்த கவிஞர்,
நிலவொளியில் மயானம்
அமைதியாய் வெட்டியான்
எங்கோ உதிர்ந்துகொண்டிருக்கிறது ஒரு பூ
என்கிறார். இந்தக்கவிதை பல விதமான அடர்த்தியான அர்த்தங்களுக்கு உரியதாகிவிடுகிறது. இரவு நேர அமைதி. இடமோ மயனாம்; நடுக்கத்திற்கும் அச்சத்திற்கும் இடம் தருவது; ஆனால் வெட்டியான் அமைதியாக இருக்கிறான். ஆனால் அவனது அமைதியிலும் ஒரு பொருள் இருக்கிறது. எந்தச் சூழ்நிலையிலும் பக்குவம் பெற்ற மனம் எதையும் சிந்திக்காமல் இருப்பது உண்டு. புறவெளியில் நாட்டம் இருப்பது இல்லை. இது ஒரு மோன நிலை. அடுத்து. வெட்டியான் அப்படிப்பட்டவனாக இருக்கவும் இல்லாதிருக்கவும் வாய்ப்புண்டு. அவனது தொழிலுக்கு அடுத்த வேலை வந்து கொண்டிருக்கிறது. உதிரும் பூ என்று சொல்லியிருப்பதையும், எங்கோ ஒரு பூ என்று கூறப்பட்டிருப்பதையும் ஒரு மாற்றுச் சிந்தனையாக  எண்ணிக்கப்பார்க்க வாய்ப்புண்டு. உதிரும் பூ  இறப்பிற்கு ஒரு குறியீடாகவும் (death symbol)கருதப்படலாம். இதனை எண்ணிப் பார்க்கையில், தாமஸ் கிரேயின் இரங்கற்பாவும், உமர்கய்யாமின் ரூபாயத்தும் நினைவுக்கு வருகின்றன. அந்தச் சாயலில் குமரனாசானின் வீணப் பூவும் மனத்தில் வந்து அலைமோதுகிறது. தாமஸ் கிரேயின் வரிகளும்,, (Full many a flower is born to blush unseen , And waste its sweetness on the desert shore) உமர்கய்யாமின்  வரிகளும் (And  look a thousand  blossoms with the day, wide  and a scattered into clay) மனத்தில் வந்து மோதிப்பின் செல்கின்றன.
தலைப்புக்கவிதையான,
இலையின் நுனியில்
வழியும் மழைத்துளியில்
செல்ஃபி எடுத்துக்கொள்கிறது மரம்
என்பது புதிய நோக்கில் சொல்லப்பட்டுள்ளது.
அண்மைக்காலத்திய அறிவியல் தொழில் நுட்பத்தால் ம் வழங்கியிருக்கும் செல்ஃபியை இக்கவிதையில் அழகுறப் பொருத்திக்காட்டியிருக்கிறார். இலையின் நுனியில் மழைத்துளி கீழே விழ இருக்கும் தருணத்திற்கும், வழியும் தருணத்திற்கும் உள்ள இடைவெளிக்குள்ளான ஒரு கணநேரத்தில் மரம் செல்ஃபி எடுத்துக்கொண்டுவிடுகிறது. இலையின் நுனியில் வழியும் என்ற சொற்சேர்க்கை கவிதைக்கு வலிமையூட்டுகிறது.
அன்றாடம் வந்துபோகும் காட்சிகளையும், கேட்கும் உணர்வினையும் கவிதையில் சூழல் நோக்கிப் பொருத்திக் காண்பது கவிஞர்களுக்கு இயல்பான ஒன்று. தற்செயலாக நிகழும் காட்சியைச் சூழ்நிலையோடு இணைத்துக்காட்டுகிறார் கவிஞர்,
வீட்டில் நிகழ்ந்த மரணம்
அறியாமல் எப்போதும் கூவிக்கொண்டிருக்கிறது
குயில்

இறந்த வீட்டில் யாரேனும்  ஒருவருக்காவது  அமைதியைக் கிழித்துகொண்டு வரும் ஓசை எதனோடும் பொருத்திப் பார்க்கத் தோன்றுவது மனவியல்பு. இறந்த வீட்டின் அருகில் தொடர்வண்டிப் பாதை இருக்குமானால், தொடர்வண்டியின் கடகட ஓசை கூட ஒருவருக்கு இறந்த வீட்டின் அமைதியான சூழலை அந்த ஓசையோடு இணைத்துக் காணத்தோன்றும். மயான அமைதி என்று அது போன்ற ஒரு நிலையில் இங்கே குயில் கூவுவது இயல்பாக இருந்தாலும் அதற்கு மரணித்திருக்கும் வீட்டின் சூழல் அறியாது தாம்பாட்டாற்குக் கூவுகிறது. வழக்கமாக எப்போதும் கூவுகிற குயில் அந்தச் சூழலிலும் கூட இயல்பாகக் கூவுகிறது.  

தம் கருத்தைக் கூரிய சிந்தனையில் பதியவைக்கும் கவிஞர், நிலையாமையைத் தாம் கண்டுணர்ந்த இயற்கைக் காட்சியில் பொருத்திக்காட்டுகிறார்.
அடுத்த மழை
பார்ப்பதற்கில்லை
ஈசல்
என்ற கவிதையும்,
பதித்த எல்லாத் தடங்களும்
அடுத்த அலைவரைதான்
என்ற கவிதையும் இணைத்துப் பார்க்கத்தக்கவை. பறக்கும் 'சிலகணங்களுக்குள்ளாகவே  மடிந்துபோகும் ஈசலும், மறையும் கால்தடமும் வாழ்வியலோடு பொருத்திப்பார்க்கத்தக்கவை. நிலையற்ற தன்மைக்கு எடுத்துக்காட்டாக இருப்பவை.  

மாற்றுச் சிந்தனையிலும், முரண் உத்தியிலுமாக அமைந்நுள்ள பல கவிதைகள் இத்தொகுதிக்கு அழகு சேர்க்கின்றன.
நீ நடந்துவருவதைப் பார்த்த
                                   பின்பும் யார் சொன்னது
நிறைகுடம் தளும்பாது
என்று என்ற கவிதையும்,
ரோஜா விற்பவனின் குரலில் முள்
என்ற கவிதையும்,
இன்னும் கூவித்தான்
விற்கவேண்டியிருக்கிறது பூக்களை
என்ற கவிதையும் மேற்கூறிய கூற்றுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

இத்தகைய குறுங்கவிதைளைப் படிக்கப் படிக்க எண்ணங்கள் விரிந்துகொண்டே செல்லும். அதற்குக் காரணம் எதை எப்படிச் சொல்லலாம்  என்ற எண்ணத்தில் வழியும் கவிப்பெருக்கும், வடிவ நேர்த்தியும்தான்! படிக்க மட்டுமின்றிப் படிப்போரைப் படைக்கும்படியாகவும் தூண்டுவது படைப்பாளர்க்கு வெற்றிதானே
         













1 கருத்து:

  1. மிகவும் ரசித்து எழுதியுள்ளீர்கள் ஐயா. ஒன்றை ஒன்று விஞ்சும் அளவு மிகவும் அருமையாக உள்ள கவிதைகள் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு