வியாழன், 11 ஜூலை, 2013

கிளியாகி...! சிறுகதை

கிளியாகி.........................!
         

ஞானாம்பிகைக் கலைக்கல்லூரி அரசூர் நெடுஞ்சாலையின் அருகில், பத்து ஏக்கரில் கம்பீரமாக நவீன தொழில் நுட்பத்துடன் கட்டப்பட்டிருந்தது. சுற்றியுள்ள. வேப்ப மரங்கள், புன்னை மரங்கள் கண்களுக்குக் குளிர்ச்சியாக இருந்தன. நெடுஞ்சாலையில் இருந்து பார்த்தால் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குக் கல்லூரியின் எடுப்பான தோற்றம்.  பிரமாண்டமாகக் காட்சியளித்த அந்தக் கல்லூரி சேதுராமன் அறக்கட்டளையைச் சார்ந்தது.

சேதுராமன் ஆளுங்கட்சியின் பின்னணியில்தான் அந்தக் கல்லூரியைக் கட்டியிருந்தார். அந்த அறக்கட்டளையின் சார்பில் உருவாகியிருந்த ஞானாம்பிகை கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரசூர் கிராமத்தை ஒரு குட்டி நகரமாக மாற்றியிருந்தது. நெடுஞ்சாலையில் சின்னச்சின்ன பெட்டிக் கடைகள்  முதல் உணவுவிடுதி வரை  வசதிக்கேற்ப வந்துவிட்டன.

எப்போதோ சேதுராமன் குறைந்த விலைக்கு வாங்கியிருந்த புஞ்சை நிலம் சேதுராமனுக்குத் தக்க சமயத்தில் கைக்கொடுத்தது, கலைமகள் கடாட்சம், திருமகளையும் அங்குப் பிரசன்னமாக்கியிருந்தது. முதலில் அவர் அந்த நிலத்தை மனைகளாகப் போட்டு விற்று விடுவது என்றுதான் நினைத்திருந்தார்.  கல்லூரி தொடங்கினால் லாபகரமாக இருக்கும் என்று நண்பர் கிள்ளியூர் கிள்ளிவளவன் சொல்லவே தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு  கல்லூரி கட்டுவதற்கான திட்டத்தில் இறங்கினார். அரசியல் பின்னணியும் அவருக்குப் பக்க பலமாக இருக்கவே ஞானாம்பிகை என்று தம் அம்மாவின் பெயரைச் சூட்டிக் கல்லூரியைத் தொடங்கிவிட்டார்.  தேசிய நெடுஞ்சாலை  என். ஹெச் 45 ன் வலப்புறத்தில், ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மிக கம்பீரமாகக்காட்சி யளித்தது அந்தக் கல்லூரி.

ஞானாம்பிகைக் கல்லூரி வாசலை ஒட்டி, செக்யூரிட்டி இருக்கும் இடம். அதனை அடுத்துக் கல்லூரிப் பேருந்து நிறுத்தும் இடம். அலுவலகக் கட்டடத்திற்கு அருகில் வலதுபுறத்தில் கிழக்குத் திசை பார்த்தபடி முதல்வர் அறை. அதை ஒட்டித் தெற்குப் புறத்தில் துறைகள்  சம்பந்தப்பட்ட அறைகள். எல்லாம் வாஸ்துப்படி அமைய வேண்டும் என்று பார்த்துப்பார்த்து சேதுராமன் கட்டியிருந்தார்.

கல்லூரி தொடங்கிய காலத்தில் மிகக் குறைவான மாணவர்களே சேர்ந்திருந்தனர். ஆண்டுகள் செல்லச் செல்ல மாணவர் சேர்க்கை அதிகமாகியது. ஆசிரியர் எண்ணிக்கையும் அதிகமாகியது. அதிகமாகியதில் மாணவர்களிடம் வாங்கும் தொகை யையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

ஆசிரியர்கள் பலர் புதிதாகச் சேர்ந்திருந்தனர். அவர்களில் பலரும் எம்.பில், பிஎச். டி பட்டம் பெற்ற இளைஞர்கள். அவர்கள் கலைத்துறையிலும், அறிவியல் துறையிலும்  உயர்ந்த பட்டங்களைப் பெற்றிருந்ததால் அக் கல்லூரியில் பேராசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.

மொழித்துறையில் தமிழ்ப்பேராசிரியர் சின்னசாமி துறைத்தலைவராக இருந்தார். அவர் தனக்குக் கீழே பணிபுரிகின்ற அனைவரும் டாக்டர் பட்டம் வாங்கியிருக்கத் தான் வாங்கவில்லையே என்ற வருத்தம் அவரிடம் மிகுதியாக இருந்தது. தன்னிடம் படித்த மாணவர்களாக  இருந்து இப்போது  தனக்குக் கீழே பணியாற்ற வந்துள்ள சிவகுமார், செல்வராசன் ஆகிய இருவரும் டாக்டர்  பட்டம் பெற்று இருந்தது அவரை மேலும் கவலை கொள்ளச் செய்தது. அது அவரைத் தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாக்கி இருந்தது.

சின்னசாமி டாக்டர் பட்டத்திற்காகப் பதிவு செய்துகொண்டதோடு சரி. அவருக்கு அதைக் காட்டிலும் கந்து வட்டி, ரியல் எஸ்டேட், இத்தியாதிகளில் நாட்டம் சென்றதால் டாக்டர் பட்டத்திற்கான ஆய்வினைத் தொடரமுடியாமல்  போனது வருத்தமளித்தது. எதிலும் தாம் தாழ்ந்துபோய்விடக் கூடாது என்று இருப்பவர் அவர். டாக்டர் பட்டம் பெறாவிடில் கல்லூரி நிர்வாகம்  எதிர்காலத்தில்  தன்னை ஒரு மாதிரியாக  நடத்தும்  என்ற அச்சமும் அவரிடம்  இருந்தது. இளைஞர்கள் போல முனைந்து ஆய்வினை முடித்துவிட முடியாதா என்ற தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டார்.

சின்னச்சாமி ஆய்வு செய்வதென முடிவெடுத்தார். முன்பே அவர் பதிவு செய்த தலைப்பில் ஆய்வினைத் தொடர்வது என்று தீர்மானித்தார். அவர்  ஆய்வினைத் தொடர்வதற்குக் கால அவகாசமும் இருந்தது. குறுகிய காலத்தில் சீக்கிரம் ஆய்வுப்பட்டம் பெற ஆயத்தமானார்.

இளங்கலையில் விலங்கியல் பட்டம்  பெற்று, முதுகலையில்  தமிழ் இலக்கியம் படித்து  அதில் தேர்ச்சி  அடைந்து கல்லூரிக்கு ஆசிரியராகச் சேர்ந்தவர் சின்னசாமி. அவர் ‘இலக்கியத்தில் கிளிகள்’  என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டிருந்தார். அந்தத் தலைப்பில் ஆய்வு செய்வதற்குக் காரணம் இருந்தது. அவர் இளங்கலை பயின்ற போது  விலங்கியலில் அவர் ‘ரேங்க் ஸ்டூடண்ட்’.  அப்போதிருந்தே கிளிகளைப் பற்றி ஆய்வினை அவர் மேற்கொள்ளவேண்டும் என்று எண்ணியிருந்தார். அதற்கு இன்னொரு பின்னணியும் உண்டு. தாம்  இளங்கலை படித்தபோது தமது ஆசிரியர் ஆறுமுகம்  ஆந்தையைப்பற்றி ஆராய்ச்சி செய்தது  அவருக்கு நினைவு வந்தது. ஆந்தைககளின் வாழ்க்கை முறைகளைப் பற்றிய அறிவியல் ஆய்விற்கு ஆறுமுகத்திற்கு டாக்டர் பட்டம் கிடைத்திருந்தது. அவரைப் போலவே தாமும் ஆய்வு செய்யவேண்டும் என்று நினைத்துத்தான் அந்தத் தலைப்பை டாக்டர் பட்டத்திற்குத் தேர்வுசெய்திருந்தார்.

ஓய்வில்லாமல் ஆய்விற்கு அயராது இரவு பகலாக உழைப்பது என முடிவு செய்தார்.  மற்ற இத்யாதி வேலைகளை ஒருபுறம் ஓரங்கட்டி வைத்துவிட்டு ஆய்வுப் பணியினைத் தீவிரமாகத் தொடர்ந்தார்.    
 
கிளிகள் பற்றித் தமிழ் இலக்கியத்தில்  என்னென்ன தகவல்கள் உள்ளனவோ அவற்றை எல்லாம் தொகுக்கத் தொடங்கினார். வீட்டிலும், வெளியிலும் தாம் பயிற்றுவிக்கும் கல்லூரியிலும் ஆய்வு நினைப்பே ஆழமாக அவரிடத்தில் பதிந்துவிட்டது. பழங்காலம் முதல் இக்காலம் வரை கிளிகளைப் பற்றிய முழுத் தகவல்களை விரைந்து சேகரித்தார். தன் மனைவியையோ அல்லது நான்கு வயது மகள் அஞ்சுகத்தையோ  கொஞ்சு வதற்குக் கூட நேரங்கிடைக்காமல்  ஆய்வுப்பணி அவரைத் தீவிர மாக்கி இருந்தது. கிளி பற்றிய இலக்கியத் தகவல்களை எல்லாம் குறிப்பெடுத்த பின்னர்,  இணைய தளத்தில் கிளி பற்றிய செய்திகளை அறிவியலோடு தொடர்புபடுத்திக் காண வேண்டும் என்று எண்ணி ‘கூகுளில்’ தேடலானார். ‘கக்காட்டு’, ‘மக்காவ்’ முதலிய கிளி வகைகள், அவை எந்தெந்த நாடுகளைச் சார்ந்தவை, கிளிகளின் வண்ண வண்ணத் தோற்றங்கள், அன்றாட வாழ்க்கை முறைகள் முதலியவற்றைக் கணினியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொண்டார். ‘வேர்ல்ட் பேரட் டிரஸ்ட்’ என்ற கிளிகளுக்கான அமைப்பிருப்பதை அறிந்து கொண்டு வெளிநாட்டில் இருந்து சில தகவல்களைப் பெற்றார்.  தமது ஆய்வு விரிவாக அமைய வேண்டும் என்று எண்ணிஅவ்வாறு செயல் பட்டார்.

சின்னசாமி  தாம் எடுக்கும் வகுப்பைக் கலகலப்பாக்கி விடுவார். கிளிகள் பற்றிய சின்னச் சின்ன விஷயங்களைச் சேகரித்துத் தரும்படி மாணவ, மாணவிகளைக் கேட்டுக் கொண்டார். அவர்கள் வீட்டுப் பெரிசுகள் வழியே கேட்டறிந்து வரவும் பணித்திருந்தார். கிளியைப் பேச வைப்பது எப்படி என்று ஒரு  மாணவி தன் பாட்டியிடம் கேட்டுவந்ததை அப்படியே செயல்படுத்தவும் தொடங்கினார்.

கிளியின் நாக்கை இரண்டாகப் பிளந்து மிளகாய்ப் பொடியினைத் தடவி வந்தால் அது நாளடைவில் பேசும் என்று ஒரு மாணவியின் பாட்டி சொன்ன தகவலின் பேரில் அந்த மாணவி குறிப்பெடுத்துக்கொண்டு வந்ததை வைத்து, சின்னசாமி அச்சோதனையைச் செய்துபார்க்கவும் தவறவில்லை. வீட்டில் கிளி வளர்ப்பதென்று முடிவு செய்தார்.  பேசும் கிளி பற்றி இலக்கியத்தில் வருவதால், கிளியை வளர்த்துப் பேசச் செய்துவிடுவது எனத் தீர்மானித்தார். கிளியின் பழக்கவழக்கங்களை நேரிடையாகக் கண்டறிந்து எழுத வேண்டும் என்று எண்ணியதும் அவர் கிளி வளர்ப்பிற்கு ஒரு காரணமாயிருந்தது.

கிளிக் கூண்டு வீட்டுக்கு வந்தது முதல் அவரது மனைவிக்குத் தூக்கம் தொலைந்தது.மனைவி காமாட்சிக்கு அந்த ஆராய்ச்சி உலகம் பிடிபடவில்லை. தன் கணவனின் இத்தகைய செயல் கண்டு  அவளுக்கு எரிச்சல்தான் ஏற்பட்டது. தான் பாலூட்டி வளர்த்த கிளியான நான்கு வயது மகளான வினிதாவைக் கொஞ்சம் கூடக் கவனிக்காமல் அவர் கூண்டுக்கிளியைக் கவனிப்பதிலும், அதனைப் பராமரிப்பதிலும் சின்னச்சாமி காட்டிய ஆர்வம் அவளுக்கு என்னவோபோல் இருந்தது.  அவளுக்கு அதில் நாட்டமிருந்ததாய்த் தெரியவில்லை.

ஒரு நாள் அத்திப் பூத்தாற்போல,மனைவியைத் திரைப்படத்திற்கு அழைத்தார். அவளுக்குப் பிறகுதான் தெரியவந்தது. ‘கிளிப்பேச்சுக் கேட்க வா’ என்று  படத்தின் பெயர் இருந்ததுதான் அதற்குக் காரணம்.

கிளியோடு தொடர்புடையது எதுவாக இருந்தாலும் சின்னச்சாமிக்குப் பிடிக்கும். வேப்பங்கனி கூட இதனால் அவருக்குப் பிடித்துப்போனது. கிளி நினைவாகவே அவர் வாழ்க்கை மாறத்தொடங்கியிருந்தது.

காதலுக்குக்குரிய கடவுள் மன்மதனைப் பிடித்திருந்தது. அதுபோல் வழிபடும் தெய்வத்திலும் மீனாட்சியம்மையைப் பிடித்திருந்தது. அவளது தோளில்  அமர்ந்திருக்கும் கிளி சமேதமாக அவள் காட்சியளிப்பதால் அவருடைய வழிபடும் தெய்வமாக மீனாட்சியம்மையை வணங்கலானார்.

கிராமத்திலிருந்து படிக்க வந்திருக்கும் மாணவிகளான பஞ்சவர்ணம், சுசீலா போன்றோர் பெயர்களை வருகைப்பதிவேட்டிலிருந்து அழைக்கும்போது ஒரு முறைக்கு இருமுறை அழைத்தற்குக் கிளியோடு சம்பந்தப்பட்ட அவர்கள் பெயர்களே காரணமாக இருந்தது. வருகைப் பதிவேட்டில் அவ்வாறு அழைத்து முடித்ததும், வராதவர்கள் இருந்தால்,  அவர் பாடம் நடத்துவதற்கு முன் ‘வண்ணக்கிளி மொழியார் எல்லோரும் வந்தாரோ’ என்று கேட்பதில் தவறமாட்டார். அதே போல வகுப்பில் யாரேனும் தூங்கிவழிந்தால், கோபப்படாமல், அருகில் வந்து ‘எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ’ என்று சொல்லி எழுப்புவதும் அவர்க்கு வழக்கமாகிவிட்டது.

பல்கலைக்கழகப்பாடத்திட்டக்குழுவில் அவர் ஒரு சமயம் உறுப்பினராக இருந்தபோது. ‘கிளிவிடு தூது’ என்ற சிற்றிலக்கியத்தைப் பாடத்தில் வைக்கவும் காரணமாயிருந்தவர் சின்னச்சாமி. பாரதி பாடிய பாடல்களில் ‘கிளிக் கண்ணி’ அவருக்குப் பிடித்தமான ஒன்று. தனிமையில் இருக்கும் போது அதனை ராகம் போட்டுப் பாடி மகிழ்வதுண்டு. கல்லூரிக்  கவியரங்கில் ‘கவிச் சொல்லிக் கேளீர்’  என்று தலைப்புத் தரப்பட்டிருந்ததைத் திருத்திக் கிளிச்சொல் கேளீர் என்று மாற்றி அமைத்ததில் அவருக்குப் பங்கு உண்டு.  

அந்த அளவிற்குக் கிளி ஆராய்ச்சிப் பேராசிரியர் சின்னச்சாமியின் ஆர்வத்தை மேலும் மேலும் தீவிரமாக்கியிருந்தது.

ஆய்வால் தூக்கத்தைத் தொலைத்திருந்த சின்னச்சாமி ஒருநாள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது கனவு கண்டார். சின்னச்சின்னச் சீட்டுகளைக் கிளி ஒன்று தன் அலகால் மெல்ல மெல்ல எடுத்து வைப்பதான  கனவாக  அது இருந்தது. கிளி ஜோசியமாக்கும் என்று நினைத்தார். நேற்று முன்தினம்  மடுவாங்கரை ஓரமாக இருந்த கிளிஜோசியக் காரனிடம் ஜோசியம் பார்த்தது நினைவுக்கு வந்தது.  கனவில்  கிளி வந்ததால் அவரது உறக்கம் கலைந்தது. குறிப்பேட்டைத் தேட முயன்றார்.

அரைகுறையான உறக்கத்தில் இருந்த சின்னச்சாமி கண்களைக் கசக்கிய படி சுற்றும் முற்றும் பார்த்தார். தன் மகளை அவர் எடுத்துவைத்திருந்த குறிப்புகளைத் தாறுமாறாகக் களைத்துப் போட்டிருந்தாள். அவளை மீண்டும் மீண்டும் உற்றுப்பார்த்தார். தாம் பார்ப்பது கனவா அல்லது நனவா என்று அவரால் தீர்மானம் செய்ய முடியவில்லை. மகள் கிளியாக மாறிப்போயிருந்தான்.  பறப்பதற்குச் சிறகுகள் முளைத்திருந்தும் மகளால் பறக்க முடியாமல் போனது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக