புதன், 24 ஆகஸ்ட், 2011

நல்லதோர் அடையாளம்



நாவல்களைப் படிப்பது என்பது அருகிவரும் காலமாகிப் போகிவிட்டதோ என்ற ஐயப்பாட்டைத் தோற்றுவிக்குமாறு இன்றைய கால கட்டம் இருக்கிறது. மிக அதிகமான பக்கங்களைக் கொண்ட படைப்புகளுக்குத் தொடக்க காலத்தில் இருந்த வரவேற்பினை இன்று காணுமாறு இல்லை. வரலாற்று நாவல்களைப் படித்து மனசைப் பரவசத்திற்கு உள்ளாக்கிய காலம் அன்று இருந்தது. இன்றும் ஒரளவே இருக்கிறது. அன்று பிரபலமான நாவலாசிரியர்கள் சிலரின் சில படைப்புகளைப் படித்து ரசிப்போர் இன்றும் இருக்கவே செய்கின்றனர்.
காட்சி ஊடகங்கள் வந்துவிட்ட பிறகு புனைகதையைப் படிப்பதற்கான சூழ்நிலை குறைந்து வருவதைக் கணக்கெடுக்கவேண்டும். இருப்பினும் இன்றைய நாவல் உலகில் தேர்ந்தெடுத்துப் படிக்கக்கூடிய அளவிற்கு வாசகர்கள் இருக்கின்றனர். அவர்களிடையே தீவிர வாசிப்புத் தன்மை கூடுதலாக இருப்பது வரவேற்புக்கும். நல்ல இலக்கியம் வளர்ந்துவருவதற்கும் உரிய அடையாளத்தைப் பெற்றிருக்கிறது. அவற்றில் ஒன்று தமிழ் மகனின் வெட்டுப்புலி என்னும் நாவலாகும்.
வெட்டுப்புலி என்ற தலைப்பே ஓர் குறியீட்டு உத்தியைக் கொண்டிருப்பதாகக் கருத இடமுள்ளது. அது நாவலாசிரியரின் வாழ்க்கையோடு தொடர்புடையதாகலாம். அதற்குரிய போதிய தடயங்களைக் காணமுடிகிறது.
ஓரு நூற்றாண்டு கால வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகளை வெறும் வரலாற்றுத் தகவல்களாக இல்லாமல், கதைமாந்தரின் குணங்களில் கலந்தும் கரைந்தும் கதைப்பின்னலாக நகர்த்திச் சென்றிருப்பது ஆசிரியரின் திறத்தைக் காட்டுகிறது.
வரலாற்று நாவல்கள் என்று பொதுவாக அழைக்கப்படுவது தவறான பிரயோகம். தமிழில் வரலாற்று நாவல்கள் என்ற ஒன்று கிடையாது. ஆனால் வரலாற்றுப் புனைகதைகள் உண்டு. உண்மை நிகழ்ச்சிகளின் அடிப்படையில் புனைவுடன் எழுதுவதையே வரலாற்று நாவல்கள் என்கின்றனர். இது தவறு. வரலாற்றுப் புனைகதை என்ற சொற்பிரயோகம்தான் சரியானது. பொன்னியின் செல்வன் தொடங்கி இதுகாறும் வெளிவந்துள்ளவற்றை அவ்வாறுதான் அழைக்கவேண்டும். அலையோசை போன்ற நாவல்கள் ஓரளவு கற்பனை கலந்த சமகால வரலாற்றுணர்வுடையது.
வெட்டுப்புலி முற்றிலுமாக வேறுபட்ட, மிகைப்படுத்தப்படாத சமகால வரலாற்றைக் கூறுகிறது. நாற்பதுகள் தொடங்கிப் புத்தாயிரம் வரையிலான நீண்டதொரு காலத்தில் நாவல் பயணிக்கிறது. ஆசிரியர் சொல்லியிருப்பது போல, இது நூறுவயது பயணம். கடந்த கால நிகழ்வுகளோடு மட்டுமன்றி, நிகழ்கால உண்மைகளையும் மூடிமறைக்காமல் எழுதப்பட்டதாக உள்ளது.
ஆசிரியரின் முன்னுரையாக, 'நாவலுக்குள்' என்ற பகுதியிலிருந்து சில உண்மைகளை அறிகிறோம்.
'இந்த நாவலைத் திராவிட இயக்க நாவலாக வடிக்கவேண்டியிருக்கிறது; திராவிட கண்ணாடி அணிந்துபடிப்பது அவசியமாக இருக்கிறது'
என மனந்திறந்து பேசுகிறார். திராவிட அரசியலுக்கும் அதோடு தொடர்புடைய சினிமா வளர்ச்சிக்கும் தமிழர்களின் கையில் மௌனசாட்சியாக இருப்பதை வெட்டுப்புலியைப் படமாகக் கொண்ட தீப்பெட்டி உணர்த்திவிடுகிறது. ஒரு தீப்பெட்டியில் அடங்கியுள்ள குச்சிகளைப் போலவே நாவலிலும் எண்ணிக்கை அதிகமான கதைமாந்தர்கள்!. அவர்களின் அகமன வெளிப்பாடுகள் ஒருபுறம்! தீக்குச்சியின் தலையில் இருக்கும் கந்தகக் கொண்டைகளாகக் கதைமாந்தர்களின் உணர்வுகளை-உறவுகளை - உரசல்களை - உரசிப் பார்க்கத் தீப்பெட்டியின் வெளிப்புறத்தில் இருக்கும் கந்தகப் பட்டை!
இப்படி அகமும் புறமுமாகக் கொழுந்து விட்டு எரியும் எண்ணங்களை அப்படியே பிரதிபலித்திருக்கிறார் ஆசிரியர். உரசிலில்தானே எதுவும் பற்றி எரியும். கதைமாந்தரின் குணாதிசயங்களும் அப்படிப்பட்டவையே.
கதைமாந்தர்கள் பட்டவர்த்தனமாகப் பேசும் உரையாடல்கள் நாவலுக்கு வலுசேர்த்திருக்கிறது. இந்த நாவலில் யாரும் நிழல் மனிதர்களாக இல்லாமல், நிசமனிதர்களாக்கி இருப்பதும் நாவலுக்கு வலிமை சேர்த்துள்ளது.
நாற்பதுகளின் மையப்பகுதியில், சிறுத்தையைக் கொன்ற கொள்ளுத்தாத்தாவின் படம் வெட்டுப்புலித் தீப்பெட்டியில் காட்சி அளிக்கவும், தாத்தா பற்றிய வரலாற்றுண்மையை அறிந்துகொள்வதற்காக நண்பர்களோடு ( பிரபாஷ், பெர்ணான்டஸ்) கிராமப்புறம் நோக்கிப் பயணிப்பதாகக் கதைக்களத்தினெ தொடக்கம் அமைந்திருப்பது தமிழுக்குப் புதியது.
ஆசிரியர் சார்ந்துள்ளள ஜெகநாதபுரத்தையும், ரங்காவரத்தையும் குளோசப் ஷாட், மிட்டில் ஷாட் என்ற வகைகளில் காட்டியிருப்பது கதைக்கு ஒரு நம்பகத்தன்மை அளிப்பதோடு, ஆசிரியரின் சுயவரலாற்றையும் உணர்த்திவிட்டுள்ளது. நாவலுக்கு ஒரு 'நேட்டிவிட்டி'யைத் தந்துவிடுகிறது.
நாவலில் கதாநாயகனோ, வில்லனோ புகுந்துவிடாது, யாவருக்கும் சம்பங்கு அளித்திருப்பது உண்மையின் உலகம் என்பதனை உறுதி செய்கிறது. நாவலில் பேராசிரியர்கள் சிலரும், கவிஞர்கள் சிலரும், மாவீரன் பிரபாகரனும் இடம் பெற்றிருப்பது ஒரு வகையில் நாவலாசிரியரைப் பாதித்த பெயர்களாக- அவர்கள் 'மின்னல்' வருகையாக வந்துபோவது இயல்பாக உள்ளது. லட்சுமணன் தொடக்க முதல் இறுதி வரை நாவலில் உலாவந்தாலும் அவனை ஆசிரியர் கதாநாயகனாக ஆக்கிவிடவில்லை.
வெள்ளையர் குதிரையில் சவாரி செய்துபார்த்துவிடுவது என்ற லட்சுமணின் எண்ணம் கதையைத் தொடங்குவதற்கும், தொடர்வதற்குமுரிய எதிர்பார்ப்பைத் தருகிறது. வெள்ளைக் காரனின் குதிரையைச் சவாலாக ஏற்றுக்கொண்டு சவாரி செய்வது கூட நம்மை அடக்கி ஆண்ட வெள்ளையரை நாம் அடக்கிவிடவேண்டும் என்ற ஆதங்கத்தை அவன்பால் காணலாம்.
நாற்பதுகளில் தசரத ரெட்டியின் சகலை சிறுத்தையை வெட்டியது இயல்பான வருணனையில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. முப்பதுகளில் சின்னா ரெட்டி சொக்கலிங்க ரெட்டியின் உடலில் ஏற்பட்ட கட்டிக்கு வைத்தியம் பார்த்ததும் அவ்வாறே இயல்பான நிகழ்ச்சியாக வந்துபோகிறது. தசரத ரெட்டி முத்தம்மா மீது கொண்டிருந்த சபல எண்ணம் பிராய்டின் உளவியல்படி அழுத்தமானதோர் அகமனப்பதிவு. நாற்பதுகளில் லட்சுமணன் குணவதி மீதுள்ள விருப்பமும் அப்படிப்பட்டதே. முத்தம்மாள் கணவன் ருத்ரா ரெட்டி ஒரு வித்தியாசமான படைப்பு. இன்றும் கூடக் கிராமப் புறங்களில் அவனைப் போலவே சிலர் இருப்பது நிசம். ஆறுமுக முதலியார்- சுந்தராம்பாள் குடும்ப உணர்வு யதார்த்தம். அவர்கள் உரையாடலும் இயல்பான வெளிப்பாடு. கணேசன் பெரியார் மீது கொண்டுள்ள தீவிரப் பற்றும், பிராமணர்கள் மீது கொண்டிருந்த தீவிர வெறுப்பும் நாவலுக்கு இன்னொரு பரிமாணம் தருகிறது. இந்த அளவிற்குத் தமிழ் நாவல்களில் துணிச்சலாக இவ்விரண்டையும் அலசியவர்கள் யாருமில்லை. தியாகராசன்-ஹேமலதா வாழ்க்கை முரண்கள் சற்றே வித்தியாசமானவை. தியாகராசனிடம் நிலவி வந்த பிராமண வெறுப்பு ஒரு சிறு நிகழ்ச்சியால், மாறிவிடுகிறது. அவன் தன் போக்கையும் எண்ணத்தையும் மாற்றிக் கொண்ட பின், அவனது பண்பு சற்று மாற்றுக் குறைவாகவே உள்ளது. சினிமா எடுக்க முயன்று சீரழிவைத் தேடிக் கொண்ட சிவகுரு வாழ்வு ஒரு நல்ல படப்பிடிப்பு.
திராவிட இயக்கம் பெரியாரால் சாதித்தது பற்றிய கண்ணோட்டம்- அவர் வாழ்வின் இறுதிப் பயணத்தை நெருங்கிக்கொண்டிருந்த போது, சௌந்திரபாண்டிய நாடார் லட்சுமண ரெட்டிக்கு, பெரியார் காங்கிரஸில் இருந்த கால கட்டத்தில் அதாவது, ஆயிரத்து இருபத்தி நான்கில், நாடார் குல மித்திரனில் வெளிவந்த பெரியார் பேச்சை வெளியிட்டிருப்பதைப் படித்துக் காட்டுவதும். அதனை லட்சுமண ரெட்டி நம்ப மறுப்பதும் கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.

1 கருத்து: