புதன், 24 ஆகஸ்ட், 2011

matham- sammatham

மரித்துப் போகாத மத உணர்வுகள்!
___________________________________________________________________________
கல்வாரியில் கசிகிறது
கண்ணீர்.
போதி மரத்தில்
வடிகிறது செந்நீர்.
மெக்கா முகாம்களில்
முகாரி கேட்கிறது.
குருஷேத்திரத்தில் கிழிந்த
பக்கங்களாய்க் கிடக்கிறது கீதை

மதங்கள் மனிதரால்
உண்டாக்கப்பட்டுக்
கடவுளால் காக்கப்படுகின்றன

கடவுளைக் கைது செய்
விசாரணை நடத்து
கடவுளை நிறுத்தித்
துக்கம் விசாரி

மனிதத்தைக் கொலை
செய்தவனிடமே துக்கம் விசாரிப்பதா?

மனிதத்தை மதத்தின் பேரால்
மரணக்குழியில் தள்ளிய
மதவாதிகளுக்கு
அவன்தானே காரணம்!
இதனை மறந்து விட்ட
மனிதம் வளருமா?

மனிதம் பிழைக்க
மதந்தான் தடைக்கல்!
எடைக்கல்லாக
இருக்கவேண்டியவர்கள்
தடைக்கல்லாக ஆனபோதுதான்
மனிதன் மானிடத்தின்
ருசி அறியாமல் போனான்!

தெய்வத்தைப் பாதுகாக்காதே
தேசத்தைப் பாதுகாவல் செய்!

மதத்தின் பிடியில்
இறுகிப் போன
மரணச் சங்கிலி
அதிலிருந்து விடுதலை பெறு.
மதம் வளர்க்காதே!
மானிடம் வளர்.

இங்குப் பருகும்
குவளையிலும்
படுக்கும் தரை விரிப்பிலும் கூட
மதத்தின் பருக்கைகள்
ஒட்டிக்கொண்டுள்ளன.

மக்கா நகரமே
தேவ மைந்தனின் திருமறை
கேட்கச் செவி சாய்க்கிறது.
மார்கழிப் பனிப்புலர்
காலையில் பைபிளின்
வாசகம்
பாவைப் பாட்டோடு
சேர்ந்து ஒலிக்கிறது.

சீக்கியக் குருத்துவாராக்களில்
குரான் ஓதப்படுகிறது.

நபிகளை விருந்துண்ண
நாயகன் இராமன்
அயோத்தியிலிருந்து
அழைப்பு விடுக்கிறான்.

ஏசுபிரான் இளைப்பாறுதற்கு
அன்பின் பரிமாற்றத்தால்
அழைப்புமடல் செல்கிறது.

எருசேல மக்கள் நீராடிக்களிக்க
கங்கைக்கும் யமுனைக்கும்
வந்து கொண்டிருக்கிறார்கள்

மசூதியின் மினாரிலிருந்து
மாடப்புறாக்கள் சிறகடித்த படியே
வானில் வலம் வருகின்றன
மாதாக்கோயிலின் மணிப்புறாக்கள்
அவற்றை வரவேற்கின்றன.

மதவெறிக்குத் தாகம்
எடுக்கும்போது
ரத்தம் குடிக்கும்
நரமாமிசமே பசி தணிக்கும்
அதன் கோரப்பற்களில் சிக்கித்
தவித்துக் கிழிபடுவது
மனித நேயமே

புதைகுழியிலிருந்து தோண்டினார்கள்
புத்தர் எழுந்தார்
அன்பைச் சமாதியாக்கிவிட்டதற்கு
வருந்தி மீண்டும் மண்ணில் புதைந்தார்,

மரித்து வந்த ஏசுவிடம்
கேள்வி கேட்கப்பட்டது
புனிதச் சிலுவையின்
பொருள் என்ன வென்று
'மண்ணில் புதையுண்டு போகவே'
என்று பதில் வந்தது

நபிகள் ஓடோடிவந்தார்
'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்பதில்
ஒரு திருத்தம் என்றார்
இகழ்ச்சி என்ற வார்த்தை
இடம் பெயர்ந்து போனதாய்த்
திருத்தம் சொன்னார்.

காந்தியும் வந்தார்
கோட்சேவும் வந்தான்
அவர்கள் இருவரும்
பரிமாறிக் கொண்டனர்-
காந்தியின் கைகளில் ஏ.கே 47,
கோட்சேயின் உதட்டில் 'ஹேராம்' மந்திரம்
மானிடம் இவர்களின்
செயல்களை அங்கீரித்தது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக